Press "Enter" to skip to content

கொரோனா பாதித்தவர்களில் 18 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்- அமைச்சர் தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில், 18 சதவீதம் பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சென்னை:

மத்திய அரசு சார்பில் ‘இ-சஞ்சீவினி’ செயலி குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்துக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டு கலந்துரையாடினார். அப்போது சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உடனிருந்தார். கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் தான் ‘இ-சஞ்சீவினி’ செயலி மூலம் பலர் மருத்துவ ஆலோசனை கேட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த செயலியை பயன்படுத்தி டாக்டர்களிடம் மருத்துவ ஆலோசனை பெற்றுள்ளனர். தமிழகத்தில் அதிகம் பேருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதை மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் பாராட்டினார்.

தற்போது கொரோனா காலக்கட்டத்தில் பொதுமக்கள் மருத்துவமனைக்கு செல்வதைவிட, தங்களுடைய செல்போனில் ‘இ-சஞ்சீவினி’ செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் பேசி எளிதாக டாக்டர்களிடம் ஆலோசனையை பெற முடியும். அதேநேரத்தில் மருந்துகள் வாங்குவதற்கான டாக்டரின் பரிந்துரை சீட்டும் பெறலாம். அந்த சீட்டை டவுன்லோடு செய்து மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம்.

சென்னையில் காய்ச்சல் முகாம்கள், வீடு, வீடாக ஆய்வு போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால் கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வருகிறது. இதேபோல், அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 18 சதவீதம் பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர். மற்றவர்கள் குணமடைந்துவிட்டனர்.

தற்போது சிகிச்சையில் உள்ளவர்களில், 80 சதவீதம் கொரோனா நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

மருத்துவர்கள் உயிரிழப்பு தொடர்பாக ஆதாரமில்லாத எந்த தகவலையும் சமூக ஊடகங்களில் பரப்ப வேண்டாம். தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 43 டாக்டர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ.) கூறுவது முற்றிலும் தவறான தகவல். இந்த சங்கத்தின் தமிழக கிளையின் தலைவர் இதை மறுத்துள்ளார். தமிழகத்தில் இதுவரை எவ்வளவு டாக்டர்கள் உயிரிழந்துள்ளனர் என்று விரைவில் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »