Press "Enter" to skip to content

சீனாவுடனான மோதல் – பாராளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் அதிரடி பேச்சு

சீனாவுடன் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் எல்லையில் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தயார் என இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பாராளுமன்றத்தில் கூறினார்.

புதுடெல்லி:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நீண்ட இடைவெளிக்கு பின் உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் தொடங்கியது.

நேற்றைய கூட்டத்தொடரில் சீனாவுடனான மோதலில் லடாக் எல்லையில் இந்திய 20 பேர் வீரமரணம் அடைந்தது தொடர்பாகவும், சீனாவுடனான எல்லைப்பிரச்சனை தொடர்பாகவும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அதற்கு பதிலளித்து இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பாராளுமன்றத்தில் கூறியதாவது:-

இந்தியா-சீனா இடையேன எல்லைப்பிரச்சனை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. தற்போதுவரை இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலை உருவாகவில்லை. எல்லை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை சீனா ஏற்றுக்கொள்ளவில்லை.

பாரம்பரிய மற்றும் வழக்கமான எல்லை சீரமைப்பை சீனா அங்கீகரிக்கவில்லை. இந்த சீரமைப்பு நன்கு நிறுவப்பட்ட புவியியல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது என்று நாம் கருதுகிறோம்.

உண்மையான எல்லைக்கோடு பகுதியை தன்னிச்சையாக மாற்றியமைப்பது இரு நாடுகளுக்கும் இடையே போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை மீறும் செயல் என சீனாவிடம் தூதரக ரீதியாக தெரிவித்துள்ளோம்.

இரு நாட்டு எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகிலும், உள்பகுதியிலும் சீனா ராணுவ வீரர்களையும், ஆயுதங்களையும் குவித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக எல்லைப்பகுதியில் இந்தியாவும் ராணுவ வீரர்களையும், ஆயுதங்களையும் குவித்துள்ளது. 

கிழக்கு லடாக், கோஜ்ரா, காங்கா லா, பாங்காங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் பல இடங்களில் இரு நாட்டுகளும் மோதலுக்கு வழிவகுக்கும் வகையில் உராய்வு புள்ளிகள் உள்ளன. 

சீன வீரர்களின் வன்முறை தன்மை இதற்கு முன் போட்டப்பட்டுள்ள அனைத்து உடன்படிக்கைகளையும் மீறும் செயலாக உள்ளது. எல்லையை பாதுகாக்கும் வகையில் நமது வீரர்களும் பதிலடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் மாநாட்டின்போது எல்லை பாதுகாப்பு மேலாண்மை விஷயத்தில் இந்திய வீரர்கள் எப்போது பொறுப்பான நடவடிக்கைகளையே எடுத்துவருவதாகவும், அதேவேளை இந்திய இறையாண்மையையும், எல்லை ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதில் இந்தியாவின் உறுதித்தன்மை குறித்து எந்த வித சந்தேகமும் கொள்ளவேண்டாம் என சீன பாதுகாப்பு மந்திரியிடம் நான் தெளிவாக கூறியுள்ளேன்.

எல்லையில் எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்க நாம் தயாராக உள்ளோம் என்பதை நான் உங்களிடம் உறுதியளிக்கிறேன். 

இந்திய ராணுவத்தின் மன உறுதி அதிகமாக உள்ளது என்பதை நான் உங்களிடம் இங்கு உறுதியளிக்கிறேன். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். பிரதமரின் லடாக் பயணம் இந்தியர்கள் இந்திய பாதுகாப்பு படையினருடன் உறுதுணையாக இருக்கிறார்கள் என்பதை எடுத்துக்கூறுகிறது.

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஜூன் 15-ம் தேதி சீன படையினர் இந்திய படையினருடன் மோதலில் ஈடுபட்டன. நமது துணிச்சலான வீரர்கள் தங்கள் உயிரைக் கொடுத்தனர், மேலும் சீனத் தரப்பில் உயிரிழப்புகள் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தினர்.

இதற்கு முன்பும் சீனாவுடன் நீண்டகால சண்டை நிலவி வந்துள்ளது. அவை அமைதியான முறையில் தீர்க்கப்பட்டுள்ளது. இரு நாட்டுக்கு இடையேயான உராய்வு புள்ளிகள் மற்றும்

வீரர்களின் ஈடுபாடு எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த ஆண்டு நிலைமை சற்று வித்தியசமான சூழ்நிலை ஆகும். பிரச்சனையை அமைதியான முறையில் தீர்ப்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.

லடாக்கில் 38 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு பகுதியை சீனா தொடர்ந்து ஆக்கிரமித்து வைத்துள்ளது. அதேபோல் சீன-பாகிஸ்தான் எல்லை உடன்படிக்கை என்று கூறப்படும் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின்  5 ஆயிரத்து 180 சதுர கிலோமீட்டர் பரப்பளவு நிலத்தை பாகிஸ்தான் சீனாவுக்கு வழங்கியுள்ளது.

இந்திய-சீன எல்லையில் அமைதியை நிலைநாட்ட இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளது. இந்தியா – சீனா இடையேயான உறவு மேம்பட எல்லையில் அமைதி மிகவும் முக்கியமான ஒன்று.

என ராஜ்நாத்சிங் கூறினார் 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »