Press "Enter" to skip to content

ராகிணி திவேதியின் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்த பாஜக

பா.ஜனதாவுக்கும், ராகிணி திவேதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், மேலும் அவர் போதைப்பொருள் வழக்கில் கைதாகி உள்ளதால் அவரை கட்சியில் சேர்த்துகொள்ள பா.ஜனதா தலைவர்களுக்கு விருப்பம் இல்லை என கூறப்படுகிறது.

பெங்களூரு :

போதைப்பொருளை பயன்படுத்தியது மற்றும் போதைப்பொருட்கள் விற்கும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக, கன்னட நடிகை ராகிணி திவேதியை கடந்த 4-ந் தேதி மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து இருந்தனர். இதே விவகாரத்தில் இன்னொரு கன்னட நடிகை சஞ்சனா கல்ராணியும் கைது செய்யப்பட்டு இருந்தார். இவர்கள் 2 பேரிடமும் சித்தாப்புராவில் உள்ள பெண்கள் பாதுகாப்பு மையத்தில் வைத்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே நேற்று முன்தினத்துடன் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணியின் காவல் துறை காவல் நிறைவு பெற்றது. இதனால் அவர்களை காவல் துறையினர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி இருந்தார்கள். பின்னர் நடிகை ராகிணி திவேதியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி ஜெகதீஷ் உத்தரவிட்டார். அதன்படி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நடிகை ராகிணி திவேதி அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் நடிகை ராகிணி திவேதி கர்நாடக பா.ஜனதாவில் இணைய முயன்றதாகவும், இதற்காக அவர் பா.ஜனதா தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருந்த ராகிணி திவேதிக்கு கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் குறைந்து உள்ளது. இதனால் அவர் அரசியலில் குதிக்க முடிவு செய்து உள்ளார். அவர் கர்நாடக பா.ஜனதா கட்சியில் இணையவும் முடிவு செய்து உள்ளார்.

இதற்காக அவர் கர்நாடக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ், துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், மந்திரி அசோக், அரவிந்த் லிம்பாவளி எம்.எல்.ஏ. ஆகியோருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் கடந்த 2019-ம் ஆண்டு மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட நாராயணகவுடாவுக்கு(தற்போது தோட்டக்கலைதுறை மந்திரி) ஆதரவாக நடிகை ராகிணி திவேதி பிரசாரத்திலும் ஈடுபட்டு இருந்தார். மேலும் பா.ஜனதா சார்பில் நடந்த யோகா தினம், மாரத்தான் பேரணி உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளிலும் ராகிணி திவேதி கலந்து கொண்டு இருந்தார்.

மேலும் கொரோனா ஊரடங்கு நேரத்தில் தனது வீட்டிலேயே சமையல் செய்து தெருவில் வசிப்பவர்களுக்கு ராகிணி திவேதி கொடுத்து வந்தார். மேலும் தொண்டு நிறுவனம் மூலம் அவர் பல்வேறு உதவிகளையும் செய்து வந்தார். ராகிணி திவேதியின் சேவையை பார்த்து அவரை பா.ஜனதாவில் சேர்த்து கொள்ள தலைவர்கள் முடிவு செய்து இருந்தனர். இந்த நேரத்தில் தான் போதைப்பொருள் விவகாரத்தில் ராகிணி திவேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

பா.ஜனதாவுக்கு ஆதரவாக ராகிணி பிரசாரம் செய்ததால் அவர் பா.ஜனதாவை சேர்ந்தவர் என்று குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இதை முற்றிலும் மறுத்த பா.ஜனதா தலைவர்கள், பா.ஜனதாவுக்கும், ராகிணி திவேதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினர். மேலும் அவர் போதைப்பொருள் வழக்கில் கைதாகி உள்ளதால் அவரை கட்சியில் சேர்த்துகொள்ள பா.ஜனதா தலைவர்களுக்கு விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. இதன்மூலம் ராகிணி திவேதியை பா.ஜனதா கைவிட்டு உள்ளது. ராகிணி திவேதியின் அரசியல் ஆசைக்கும் முற்றுப்புள்ளி விழுந்து உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »