Press "Enter" to skip to content

கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மாத்திரைகளை வழங்க மத்திய அரசு அங்கீகாரம் – சுப்ரீம் நீதிமன்றம்

கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர், பேவிபரிவிர் ஆகிய மாத்திரைகளை தருவதற்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கி உள்ளது என்று சுப்ரீம் நீதிமன்றம் நேற்று தெரிவித்தது.

புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் எம்.எல்.சர்மா என்பவர் தாக்கல் செய்த மனுவில், “கொரோனாவுக்கான சிகிச்சைக்கு ரெம்டெசிவிர், பேவிபரிவிர் ஆகிய இரண்டு கிருமிக் கொல்லி மாத்திரைகளை தருவது குறித்து மருத்துவ நிபுணர்களிடையே கருத்துவேறுபாடு நிலவி வருகிறது. இந்த நிலையில் 10 நிறுவனங்கள் இந்த மருந்துகளை உரிய உரிமம் பெறாமல் தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது.

இந்த மனு மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வில் நடைபெற்றது.

அப்போது நீதிபதிகள், 2018-ம் ஆண்டின் புதிய மருந்துகள் மற்றும் சிகிச்சையக சோதனைகள் சட்டத்தின் அடிப்படையில் இந்த இரண்டு மாத்திரைகளையும் கொரோனா சிகிச்சைக்காக நோயாளிகளுக்கு வழங்க மத்திய அரசு அங்கீகாரம் வழங்கி உள்ளது என்றும், இந்த மனுவை மனுதாரர் தாக்கல் செய்யும் போது இதை கவனிக்கவில்லை என தோன்றுகிறது என்றும் கூறி விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

அத்துடன் மனுதாரர் இந்த சட்டத்தை ஒருமுறை படித்து விட்டு ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »