Press "Enter" to skip to content

ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா தேர்வு

ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா முறைப்படி தேர்வு செய்யப்பட்டார்.

டோக்கியோ:

ஜப்பானில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 8 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்து வந்தவர் ஷின்ஜோ அபே. இதன் மூலம் ஜப்பான் வரலாற்றிலேயே நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்கிற பெருமையை அவர் பெற்றிருந்தார்.

எனினும் சிறு வயது முதலே பெருங்குடல் அழற்சி நோயால் அவதிப்பட்டு வரும் ஷின்ஜோ அபே தனது உடல்நிலையைக் கருத்தில்கொண்டு பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக கடந்த மாதம் அறிவித்தார். இருப்பினும் புதிய பிரதமரை தேர்வு செய்யும் வரை பதவியில் நீடிப்பேன் என அவர் கூறியிருந்தார். ஜப்பானைப் பொறுத்தவரையில் ஆளும் கட்சியின் தலைவர் பொறுப்பை வகிக்கும் நபரே நாட்டின் பிரதமராகவும் இருப்பார்.

அந்த வகையில் ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு கடந்த திங்கட்கிழமை நடந்தது. இதில் ஜப்பான் அமைச்சரவையின் தலைமைச் செயலாளரும் ஷின்ஜோ அபேயின் விசுவாசியுமான யோஷிஹைட் சுகா மொத்தமுள்ள 534 வாக்குகளில் 377 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

இதன் மூலம் ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் புதிய தலைவராக யோஷிஹைட் சுகா தேர்வு செய்யப்பட்டார். மேலும் அவர் ஜப்பானின் புதிய பிரதமராவதும் உறுதி செய்யப்பட்டது. எனினும் நாடாளுமன்றம் அவரை முறைப்படி தேர்வு செய்ய வேண்டும்.

அதன்படி ஜப்பான் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் நாட்டின் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா முறைப்படி தேர்வு செய்யப்பட்டார்.

முன்னதாக பிரதமர் ஷின்ஜோ அபே தனது பதவியை முறைப்படி ராஜினாமா செய்ததோடு தனது மந்திரி சபையையும் கலைத்தார். அதன் பிறகு அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் “நாங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் ஜப்பானின் தேசிய நலனை பாதுகாக்க, பொருளாதாரம் மற்றும் தூதரக உறவுகளை வலுப்படுத்த எனது உடலையும் ஆன்மாவையும் அர்ப்பணித்தேன். இந்த நேரத்தில் மக்களுடன் சேர்ந்து பல்வேறு சவால்களை என்னால் சமாளிக்க முடிந்தது. என்னைப் பற்றி நான் பெருமிதம் கொள்கிறேன்” எனக் கூறினார்.

ஷின்ஜோ அபே அரசியல் பின்னணி உள்ள குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரது தாத்தா ஜப்பானின் பிரதமராக இருந்துள்ளார். அதேபோல் அவரது தந்தை மற்றும் உறவினர்கள் பலரும் அரசியலில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர்.

ஆனால் யோஷிஹைட் சுகாவுக்கு அரசியல் பின்னணி எதுவும் இல்லை. தன்னைத் தானே அரசியலில் வளர்த்துக் கொண்டவர். ஜப்பானின் வடக்குப் பகுதியிலுள்ள அகிட்டா மாகாணத்தில் குழல்பெர்ரி விவசாயிக்கு மகனாக பிறந்த யோஷிஹைட் சுகா சிறுவயது முதலே விவசாயத்தில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். அதேசமயம் அரசியலிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது.

வியட்நாம் போரில் பாதுகாப்பு விஷயத்தில் அமெரிக்காவுடன் ஜப்பான் கை கோர்ப்பதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, அதற்கான போராட்டங்களிலும் பங்கேற்றார். இதுவே அவர் அரசியலில் இணைவதற்கான களமாக அமைந்தது. 1987-ல் யோகோஹமா நகர தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 1996-ல் தேசிய அரசியலில் ஈடுபட்டார்.

அதன் பின்னர் ஷின்ஜோ அபேயின் அமைச்சரவையில் முக்கிய இடம்பிடித்த யோஷிஹைட் சுகா அவரது நம்பிக்கைக்குரிய நபராக மாறினார். ஷின்ஜோ அபேயின் வலது கரமாக அவர் விளங்கி வந்தார். இந்த நிலையில் ஜப்பானின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள யோஷிஹைட் சுகாவுக்கு முன் கடுமையான சவால்கள் காத்திருக்கின்றன.

உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடான ஜப்பானும் பிற நாடுகளைப் போல கொரோனா காலத்தில் கடுமையான பொருளாதார இழப்புகளை சந்தித்துள்ளது. இதனை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் யோஷிஹைட் சுகா உள்ளார்.

அதன்படி கொரோனா வைரசை எதிர்த்து போராடுவதற்கும், தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் தனது அரசு முன்னுரிமை அளிக்கும் என தெரிவித்துள்ள யோஷிஹைட் சுகா ஷின்ஜோ அபே பாதியில் விட்டுச் சென்ற பணிகளையும் திறம்பட செய்து முடிப்பேன் என்று உறுதி அளித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »