Press "Enter" to skip to content

மோடி அரசின் 3 வேளாண் மசோதாக்கள் விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும் – ஜே.பி.நட்டா சொல்கிறார்

மோடி அரசின் 3 வேளாண் மசோதாக்கள் விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும் என பாரதீய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

பாரதீய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, கடந்த 14-ந் தேதி பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் மோடி அரசால் தொலைநோக்கு பார்வையுடன் கொண்டு வரப்பட்டவை என்றும், இந்த மசோதாக்கள் வேளாண் விளைபொருட்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதோடு, விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க உதவும் என்றும் கூறினார்.

குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றி கேட்டதற்கு, இது தொடர்ந்து நீடிக்கும் என்று பதில் அளித்தார். அரசியல் காரணங்களுக்காகவே இந்த மசோதாக்களை காங்கிரஸ் எதிர்ப்பதாகவும் அப்போது ஜே.பி.நட்டா கூறினார்.

அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா நேற்று முன்தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட போது பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சியான அகாலி தளம் அதற்கு எதிராக வாக்கு அளித்தது பற்றி ஜே.பி.நட்டாவிடம் கேட்ட போது, அந்த கட்சி சார்பில் எழுப்பப்பட்ட பிரச்சினைகளுக்கு பேசி தீர்வு காணப்பட்டதாக பதில் அளித்தார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »