Press "Enter" to skip to content

சண்டை நிறுத்தத்தை மீறி அஜர்பைஜான் மீது ஆர்மேனியா ராணுவம் ஏவுகணை தாக்குதல் – பொதுமக்கள் 12 பேர் பலி

சண்டை நிறுத்தத்தை மீறி அஜர்பைஜான் மீது ஆர்மேனியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.

பாகு:

சர்ச்சைக்குரிய நாகோர்னோ காராபாக் பிராந்தியம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான பிரச்சினையில் அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியா நாடுகளுக்கு இடையில் கடந்த மாத இறுதியில் பயங்கர மோதல் வெடித்தது.

இருதரப்பு ராணுவமும் கடுமையாக மோதிக் கொண்டதில் நூற்றுக்கணக்கான வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இதில் அப்பாவி மக்கள் பலரும் பலியாகினர்.

அதனை தொடர்ந்து ரஷியாவின் சமாதான முயற்சியின் மூலம் இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்துக்கு சம்மதம் தெரிவித்து, கடந்த வாரம் அங்கு சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது.

ஆனால் சண்டை நிறுத்தத்தை மீறி இரு நாடுகளும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தநிலையில் அஜர்பைஜானின் 2-வது மிகப்பெரிய நகரமான கஞ்சா நகரில் குடியிருப்பு பகுதிகள் மீது ஆர்மேனியா ராணுவம் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியதாக அஜர்பைஜான் அரசு தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டதாகவும் 30-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததாகவும் அஜர்பைஜான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து ஆர்மேனியா உடனடியாக எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில் அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியா மோதல் தொடர்பாக நாளை (திங்கட்கிழமை) ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூடி விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »