Press "Enter" to skip to content

பாகிஸ்தான் விசா பெறுவதற்கு ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள் – ஆப்கானிஸ்தானில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் விசா பெறுவதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காபூல்:

ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. 19 ஆண்டுகளாக நீடிக்கும் இந்த உள்நாட்டுப் போரில் ஆயிரக் கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். அதோடு லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் தேடி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானில் மட்டும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 30 லட்சம் அகதிகள் உள்ளதாக புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒருபுறமிருக்க உள்நாட்டு போரால் ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டதால் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அந்த நாடு மிகவும் பின்தங்கியுள்ளது.

இதனால் ஆப்கானிஸ்தான் மக்கள் கல்வி மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றுக்கு அண்டை நாடான பாகிஸ்தானையே நம்பியுள்ளனர். ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் உயர் கல்வி, மருத்துவ சிகிச்சை மற்றும் வேலைக்காக பாகிஸ்தானுக்கு செல்கின்றனர்.

இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஆப்கானிஸ்தான் மக்களுக்கு விசா வழங்குவதை பாகிஸ்தான் அரசு கடந்த 7 மாதங்களாக நிறுத்தி வைத்திருந்தது.

தற்போது கொரோனா வைரசின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு பாகிஸ்தான் மீண்டும் விசா வழங்க தொடங்கியுள்ளது.

அந்த வகையில் ஆப்கானிஸ்தானின் நங்கார்ஹர் மாகாணம் ஜலாலாபாத் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் கடந்த வாரம் முதல் விசா வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விசாவுக்கு விண்ணப்பிப்பதற்காக நேற்று அதிகாலையிலேயே நூற்றுக்கணக்கான மக்கள் பாகிஸ்தான் தூதரகம் முன்பு திரண்டனர். கட்டுக்கடங்காத கூட்டம் இருந்ததால் டோக்கன் முறையில் விசா விண்ணப்பிப்பதற்கு அனுமதிக்க தூதரக அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து தூதரகத்துக்கு அருகில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் வைத்து டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மைதானத்தில் திரண்டனர். டோக்கன் வழங்க தொடங்கியதும் மக்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு சென்றனர். இதனால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் நிலைகுலைந்து கீழே விழுந்தனர். கூட்டத்தினர் அவர்கள் மீது ஏறி மிதித்து சென்றனர்.

இந்த கோர சம்பவத்தில் 11 பெண்கள் உள்பட 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள் என்று கூறப்படுகிறது.

படுகாயமடைந்த 11 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »