Press "Enter" to skip to content

கிரிக்கெட் சங்க ஊழல் வழக்கு – அமலாக்கத்துறை அலுவலகத்தில் பரூக் அப்துல்லா ஆஜர்

கிரிக்கெட் சங்க ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் பரூக் அப்துல்லா ஆஜர் ஆனார். 3 நாளில் 2-வது முறையாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீரில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 2002-2011 இடையே பல கோடி ரூபாய் நிதி உதவி அளித்தது.

இந்த நிதியில் ரூ.43.69 கோடியை சுருட்டி விட்டதாக ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்த முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா மற்றும் நிர்வாகிகளான கான், மிர்சா, மிர் மன்சூர் கசான்பர் அலி மற்றும் முன்னாள் கணக்காளர்கள் 2 பேர் மீது புகார் எழுந்தது.

இது தொடர்பாக சி.பி.ஐ. ஊழல் வழக்கு பதிவு செய்து விசாரித்தது. அதைத் தொடர்ந்து 2018-ம் ஆண்டு அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த நிலையில் ஊழல் பணத்தை சட்ட விரோத பண பரிமாற்றம் செய்ததாகவும் சம்மந்தப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் அமலாக்கத்துறை ஒரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறது.

இந்த வழக்கில் கடந்த 19-ந் தேதியன்று பரூக் அப்துல்லாவை அதிகாரப்பூர்வமான அழைப்பு அனுப்பி வரவழைத்து அமலாக்கத்துறையினர் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதுபற்றி பரூக் அப்துல்லா கருத்து தெரிவிக்கையில், “இதற்காக நான் கவலைப்படவில்லை. நான் விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவேன்” என கூறினார்.

இந்த நிலையில் பரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் அதிகாரப்பூர்வமான அழைப்பு அனுப்பியது. அதன்பேரில், ஸ்ரீநகரில் உள்ள அமலாக்கத்துறை பிராந்திய அலுவலகத்தில் பரூக் அப்துல்லா நேற்று ஆஜர் ஆனார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

3 நாளில் இரண்டாவது முறையாக பரூக் அப்துல்லாவை வரவழைத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதில் பரூக் அப்துல்லாவின் மகனும், முன்னாள் முதல்-மந்திரியுமான உமர் அப்துல்லா கடும் அதிருப்தி அடைந்துள்ளார். தனது தந்தையின் 84-வது பிறந்த நாளின்போது அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி உள்ளதாக டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

இதுபற்றி அமலாக்கத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கூறும்போது, “சில விளக்கங்களை கேட்டறிவதற்காகத்தான் பரூக் அப்துல்லா மீண்டும் அழைக்கப்பட்டார்” என தெரிவித்தனர்.

ஏற்கனவே பரூக் அப்துல்லாவிடம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் முறையாக சண்டிகாரில் வைத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது நினைவுகூரத்தக்கது.

இப்போது 3 நாளில் இரண்டாவது முறையாக பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி இருப்பதை, அவரது தேசிய மாநாட்டு கட்சியின் செய்தி தொடர்பாளர் இம்ரான் நபி தர் கடுமையாக சாடி உள்ளார். இந்த தந்திர வழிகள், பா.ஜ.க.வின் பிளவுபடுத்தும் அரசியலுக்கு எதிராக குரல் எழுப்பும் எதிர்க்கட்சி தலைவர்களை துன்புறுத்துவதை நோக்கமாக கொண்டவை என கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »