Press "Enter" to skip to content

பெண்களின் கண்ணியத்தை காப்பாற்ற இறுதி மூச்சு உள்ளவரை போராடுவோம் – கைது செய்யப்பட்ட குஷ்பு டுவிட்

ஜனநாயக உரிமையான அமைதியான முறையிலான போராட்டம் நடத்த முயற்சிக்கும்போது எங்களுக்கு அனுமதி தடுக்கப்படுவது ஏன்? என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் பாஜகவின் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

மாமல்லபுரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.யை கண்டித்து இன்று பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பு, சசிகலா புஷ்பா, ராகவன் உள்ளிட்ட பா.ஜனதா நிர்வாகிகள் கலந்து கொள்ள இருந்தனர். ஆனால், சிதம்பரத்தில் பாஜக நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை.

ஆனாலும், தொல்.திருமாவளவனை கண்டித்து சிதம்பரத்தில் பாஜக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. 

இந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்க சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு சிதம்பரம் நோக்கி காரில் பயணம் மேற்கொண்டார். அவரை முட்டுக்காடு அருகே தடுத்து நிறுத்திய காவல் துறையினர் தடையை மீறி போராட்டத்தில் பங்கேற்க சென்றதற்காக குஷ்புவை கைது செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டது தொடர்பாக குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியதாவது:-

கைது செய்யப்பட்டுவிட்டேன்…. காவல் துறை வாகனத்தில் ஏற்றிச்செல்கின்றனர். பெண்களின் கண்ணியத்தை காப்பாற்ற இறுதி மூச்சு உள்ளவரை போராடுவோம். பிரதமர் மோடி எப்போதும் பெண்களின் பாதுகாப்பு பற்றியே பேசுவார். அவரின் பாதையில் செல்வோம். அங்குள்ள சிலரின் அட்டூழியங்களுக்கு நாங்கள் தலைவணங்கப்போவதில்லை… பாரத மாதவுக்கு ஜே..

கோழைகள் விடுதலை சிறுத்தைகள். மகிழ்ச்சியில் இருக்காதீர்கள். இது உங்கள் தோல்விதான். எங்கள் சக்தி எவ்வளவு என்று அவர்களுக்கு தெரியும் அதனால் தான் கைது செய்யப்பட்டுள்ளோம். பாஜக ஒரு போதும் தலைவணங்கப்போவதில்லை. இந்த மண்ணின் ஒவ்வொரு மகளின் மரியாதையையும் உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை நரேந்திரமோடி மேற்கொள்வார்.

கோழைகள் விடுதலை சிறுத்தைகள். பெண்களுக்கு மரியாதை அளித்தல் உங்களுக்கு கூட்டணியா? 

உங்கள் பயணம் பலத்தால் தடுத்து நிறுத்தப்படும்போது நீங்கள் சரியாக பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.  

மற்ற கட்சியினர் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படும்போது ஜனநாயக உரிமையான அமைதியான முறையிலான போராட்டம் நடத்த அனுமதி கேட்கும்போது நாங்கள் தடுக்கப்படுவது ஏன்? என அதிமுக அரசுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் நான் கேள்வி எழுப்புகிறேன். இந்த பாரபட்சம் ஏன்? அல்லது விடுதலை சிறுத்தை கட்சி கலவரத்தை 

ஏற்படுத்த திறனுடையவர்கள் என அதிமுக அரசுக்கு தெரிந்திருப்பதால் அவர்கள் பயப்படுகிறார்களா?’ என்று பதிவிட்டுள்ளார்.   

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »