Press "Enter" to skip to content

தமிழகத்தில் பா.ஜனதா கட்சிக்கு இனி முன்னேற்றம் தான் -வானதி சீனிவாசன் பேட்டி

தமிழகத்தில் பா.ஜனதா கட்சிக்கு இனி முன்னேற்றம் தான் என்று கோவையில் மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கூறினார்.

கோவை:

பா.ஜனதா கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் டெல்லியில் பொறுப்பேற்று கொண்டார். அவர், டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று கோவை வந்தார். கோவை விமானநிலையத்தில் அவருக்கு கட்சி தொண்டர்கள், மகளிர் அணியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் சிலர் வானதி சீனிவாசன் போன்ற முகமூடி அணிந்து வரவேற்றனர். பின்னர் வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜ.க. மகளிரணி தலைவர் பதவி என்ற மிக முக்கியமான கவுரவத்தை தமிழகத்திற்கு வழங்கியிருக்கின்றனர். அதுவும் தென்னிந்தியாவில் முதல்முறையாக தமிழகத்திற்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. மத்திய அரசின் திட்டங்களை பெண்கள் வழியாக கொண்டு செல்வது எங்கள் பிரதான பணியாக இருக்கும். அனைத்து நிலையிலும் பெண்களுக்கு உதவும், முக்கியத்துவம் கொடுக்கும் அரசாக மத்திய அரசு இருக்கிறது. நாடு முழுவதும் பெண்களுக்கு பாதுகாவலராக பிரதமர் இருக்கிறார் என்பதை மக்களிடம் கொண்டு செல்வோம்.

தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக வெற்றிவேல் யாத்திரையை மாநில தலைவர் முருகன் நடத்தி வருகிறார். தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சியை ஏற்படுத்துவதையே மாற்றமாக பார்க்கிறோம். தமிழகத்தில் எங்கள் கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை. கூட்டணியின் தலைமையாக அ.தி.மு.க. இருக்கிறது. கூட்டணியில் தொகுதி உடன்பாடுகள் குறித்து கட்சி தலைமை முடிவு செய்து முறைப்படி அறிவிக்கும்.

ஒவ்வொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது தான் எதிர்பார்ப்பாக இருக்கும். வெற்றிவேல் யாத்திரை ஒரு அடையாள யாத்திரை, இந்துக்களை கொச்சைப்படுத்துபவர்களை அம்பலப்படுத்தவே இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. தமிழகத்தில் பா.ஜனதா கட்சிக்கு இனி பின்னடைவு கிடையாது. முன்னேற்றம் மட்டும்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »