Press "Enter" to skip to content

தனியார் சந்தையில் ரூ.1000-க்கு தடுப்பூசி விற்பனை – புனே மருந்து நிறுவனம் அறிவிப்பு

தேவையான அனுமதி கிடைத்ததும் தனியார் சந்தையில் கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.1000-க்கு விற்பனை செய்யப்படும் என புனே மருந்து நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

புனே:

இந்தியாவில் 16-ந் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி முன்னுரிமை அடிப்படையில் தொடங்க இருக்கிறது. முதலில் மருத்துவர்கள், நர்சுகள், முன்கள பணியாளர்கள் என 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

இதற்காக புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம், தனது கோவிஷீல்டு தடுப்பூசி வினியோகத்தை நேற்று தொடங்கியது. இந்த தடுப்பூசியை தயாரித்து வினியோகிப்பதற்காக, அதை உருவாக்கியுள்ள இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடனும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடனும் இந்திய சீரம் நிறுவனம் ஒப்பந்தம் போட்டிருப்பது நினைவுகூரத்தக்கது.

இந்த தடுப்பூசி வினியோகம் தொடங்கி இருப்பது தொடர்பாக இந்திய சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதர் பூனவாலா, புனேயில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தடுப்பூசியை சாதாரண மனிதர்களுக்கு, பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு கொண்டு போய்ச்சேர்ப்பதில்தான் உண்மையான சவால் அடங்கி இருக்கிறது.

எங்கள் பார வண்டிகள் இன்று (நேற்று) காலை இந்திய சீரம் நிறுவன வளாகத்தில் இருந்து வெளியேறி சென்றன. தற்போது எங்கள் தடுப்பூசி, நாடு முழுவதும் வினியோகிக்கப்படுகிறது.

ஒரு வருடத்திற்குள்ளாக இந்த தடுப்பூசியை உருவாக்குவதற்கு மிகப்பெரிய முயற்சிகளை எடுத்த விஞ்ஞானிகள், நிபுணர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இது ஒரு பெருமிதமிக்க, வரலாற்று தருணம் ஆகும்.

எங்கள் தடுப்பூசியை மத்திய அரசுக்கு ரூ.200 என்ற சிறப்பு விலையில் வழங்குகிறோம். இது உலகின் மிக மலிவான விலைகளில் ஒன்றாகும். பிரதமரின் செயல்திட்டத்துக்கு ஆதரவு அளிப்பதற்காகவும், இந்த நாட்டின் சாமானிய மக்களுக்கு ஆதரவு அளிப்பதற்காகவும்தான் நாங்கள் மத்திய அரசுக்கு சிறப்பு விலையில் எங்கள் தடுப்பூசியை வழங்குகிறோம்.

தேவையான அனுமதி கிடைத்த உடன் எங்கள் தடுப்பூசியை தனியார் சந்தையில் ரூ.1000 என்ற விலைக்கு கிடைக்கச்செய்வோம்.

எங்கள் இந்திய சீரம் நிறுவனம், இந்தியாவில் மட்டுமல்லாது, தடுப்பூசிக்காக இந்தியாவை பார்த்துக்கொண்டிருக்கிற பிற நாடுகளுக்கும் வழங்க நாங்கள் உறுதி கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »