Press "Enter" to skip to content

மனைவியின் துயரங்களை துடைக்க 15 நாட்களில் வீட்டிலேயே கிணறு தோண்டிய கணவர்

மத்திய பிரதேசத்தில், சிரமப்பட்டு தண்ணீர் சேகரிக்கும் ஒரு பெண்ணின் அவல நிலையைப் போக்க, அவரது கணவர் வீட்டிற்குள் சொந்தமாக 15 நாட்களில் கிணறு தோண்டி அசத்தி உள்ளார்.

போபால்:

பெண்கள், தங்கள் குடும்பத்தினரின் தண்ணீர் தேவைக்காக கிணறுகளில் இருந்தும், தொலைதூர அடிகுழாய் கிணறுகளில் இருந்தும் சிரமத்துடன் தண்ணீர் சேகரித்து வரும் அவலம் நாடு முழுக்க உள்ளது. அப்படியிருந்தும் போதிய குடிநீர்-தண்ணீர் வசதி இன்றி தவிக்கும் குடும்பங்கள் ஏராளமாக உள்ளன. மத்திய பிரதேசத்தில், அப்படி சிரமப்பட்டு தண்ணீர் சேகரிக்கும் ஒரு பெண்ணின் அவல நிலையைப் போக்க, அவரது கணவர் வீட்டிற்குள் சொந்தமாக 15 நாட்களில் கிணறு தோண்டி அசத்தி உள்ளார்.

மத்திய பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் உள்ள பான்புர் பவா சிற்றூரை சேர்ந்தவர் பரத்சிங் (வயது46). இவரது மனைவி வீட்டில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து அடிகுழாய் பம்ப் மூலம் சிரமப்பட்டு தண்ணீர் சேகரித்து வருவார். அவர்களது குடும்பத்தில் 4 பேரின் அன்றாட தேவைக்கு தினசரி தண்ணீர் சேகரிக்க வேண்டியிருந்தது.

ஒருநாள் அந்த அடிகுழாய் கிணறு பழுதாகிவிட தண்ணீரின்றி சிரமம் ஏற்பட்டது. கணவரிடம் அவர் முறையிட, கூலித்தொழிலாளியான பரத்சிங், தண்ணீருக்காக அல்லல்படுவதை தவிர்க்க என்ன செய்வதென்று யோசித்தார். தனது வீட்டில் உள்ள காலியிடத்தில் சொந்தமாக கிணறு தோண்ட தீர்மானித்தார். அதற்கும் நிதிவசதி இல்லாததால், தானாகவே தினமும் உடலுழைப்பு செய்து கிணறு தோண்ட ஆரம்பித்தார். 15 நாள் கடின உழைப்பில் கிணறு தோண்டி முடித்தார். அதில் தண்ணீரும் ஊற்றெடுத்தது. இதனால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

“கிணறு தோண்டுவோம் என்று கூறியபோது ஆரம்பத்தில் மனைவி கேலி செய்து சிரித்ததாக” பரத்சிங் கூறினார். “இப்போது தங்களின் தண்ணீர் தேவை பூர்த்தியானது மட்டுமல்லாமல், வீட்டிற்கான காய்கறியை விளைவிக்கவும் தண்ணீர் கிடைத்துள்ளதாக” மகிழ்ச்சியுடன் கூறினார். அவர் வறுமையுடன் வசித்ததாகவும், பலமுறை முயற்சித்தும் ரேசன் அட்டை பெற இயலாமல் தவித்ததாகவும்” பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகத்தினர் அவருக்கு பாராட்டு தெரிவித்து விருது வழங்கினர். சில அரசு அடிப்படை வசதித் திட்டங்களில் அவர்கள் பயனடையவும் வகை செய்து கொடுத்தனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »