Press "Enter" to skip to content

ஸ்பெயின் தலைநகரில் பயங்கர வெடிவிபத்து – 3 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மேட்ரிட் நகரில் நடந்த பயங்கர வெடிவிபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேட்ரிட்:

ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மேட்ரிட். அங்கு மத்திய பிவேர்டா டி டோலிடோ பகுதியில் கத்தோலிக்க தேவாலயத்துக்கு சொந்தமான பன்னடுக்கு மாடி கட்டிடம் உள்ளது.

இந்த கட்டிடத்தை பாதிரியார்கள் தங்கி பயிற்சி பெறவும், வீடற்றவர்களுக்கு உணவு வழங்கவும் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி 3 மணி அளவில் அங்கு பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அந்த சத்தத்தால், அந்தப் பகுதியே குலுங்கியது. அதைத் தொடர்ந்து தீப்பிடித்தது. புகை மண்டலமும் உருவானது. கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து தூள் தூளானது. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

இது குறித்த தகவல் அறிந்ததும் அவசரகால பணியாளர்கள் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. விபத்து நடந்த இடத்திற்கு அருகே பொதுமக்கள் யாரும் வரக்கூடாது என காவல் துறை அதிகாரிகள் தடை விதித்தனர்.தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டன. சம்பவ இடத்தை காவல் துறை அதிகாரிகள் சுற்றி வளைத்து, யாரும் அங்கு வருவதற்கு தடை விதித்தனர். இந்த வெடிவிபத்தில் 3 பேர் பலியாகி விட்டனர், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையிலும், மற்றொருவர் படுகாயங்களுடனும் மீட்கப்பட்டு லாபாஸ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதாகவும், 6 பேர் காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.பலியானவர்களில் ஒருவர் 85 வயதான பெண் என்றும், அவர் சம்பவம் நடந்த சாலைவழியே நடந்து சென்றவர் என்றும் தெரிய வந்தது. ஒருவர் காணாமல் போய் விட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

வெடிவிபத்துக்கான காரணம் உறுதியாக தெரிய வரவில்லை. இருப்பினும், அந்த கட்டிடத்தில் கொதிகலன் பழுதை கியாஸ் தொழிலாளர்கள் சரி செய்து கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத வகையில் ஏற்பட்ட கியாஸ் கசிவால், பலத்த சத்தத்துடன் பயங்கர வெடிவிபத்து நேரிட்டதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. கொதிகலன் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் ஒருவரும் பலியானவர்களில் அடங்குவார் என்று அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

3 பேர் பலியாகி இருப்பதை மேட்ரிட் நகரத்துக்கான அரசு பிரதிநிதி ஜோஸ் மேனுவல் பிராங்கோ உறுதிபடுத்தினார்.

இந்த சம்பவத்தையொட்டிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் மிகுதியாக பகிரப்பட்டுின. அவற்றில் கட்டிடத்தின் 4 தளங்கள் இடிந்து சேதம் அடைந்திருப்பதையும், புகை பரவியதையும் காட்டின.

இந்த விபத்தைத் தொடர்ந்து, அந்த கட்டிடத்திற்கு அருகில் இருந்த பராமரிப்பு இல்லத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். வெடிவிபத்தின்போது அருகில் இருந்த பள்ளிக்கூடத்தினுள் இருந்த மாணவர்கள், ஆசிரியர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இந்த சம்பவம், அந்த நகரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »