Press "Enter" to skip to content

டெல்லி ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரியில் தகராறு செய்த வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வுக்கு 2 ஆண்டு சிறை

டெல்லி ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரியில் தகராறு செய்த வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சோம்நாத் பாரதிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதுடெல்லி:

டெல்லி மாளவியா நகர் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சோம்நாத் பாரதி. இவர் 2014-ம் ஆண்டு அமைந்த ஆம் ஆத்மி ஆட்சியில் டெல்லி சட்ட மந்திரியாக இருந்தார்.

இவர், கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், டெல்லி ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரிக்கு ஆதரவாளர்களுடன் சென்று தகராறு செய்தார். பொக்லைன் எந்திரம் உதவியுடன் காம்பவுண்டு சுவர் வேலியை தகர்த்தார். ஆஸ்பத்திரி ஊழியரை தாக்கினார்.

இதுதொடர்பாக ஆஸ்பத்திரியின் தலைமை பாதுகாப்பு அதிகாரி காவல்துறையில் புகார் செய்தார். அதன்பேரில், சோம்நாத் பாரதி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

டெல்லி கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. மாஜிஸ்திரேட்டு ரவீந்திர குமார் பாண்டே தீர்ப்பு அளித்தார்.

சோம்நாத் பாரதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு இருப்பதாக கூறினார். பாரதிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார். அவருடைய ஆதரவாளர்கள் 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அதே சமயத்தில், மேல்முறையீடு செய்வதற்காக, சோம்நாத் பாரதியை மாஜிஸ்திரேட்டு ஜாமீனில் விடுவித்தார்.

இதற்கிடையே, சோம்நாத் பாரதிக்கு அநீதி இழைக்கப்பட்டு இருப்பதாகவும், மேல்முறையீட்டில் நீதி கிடைக்கும் என்றும் ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.

சோம்நாத் பாரதி ஏற்கனவே 2015-ம் ஆண்டு அவருடைய மனைவி அளித்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டவர். அவ்வழக்கில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »