Press "Enter" to skip to content

அமெரிக்காவுடன் புதிய உறவை ஏற்படுத்த தயார் – ஈரான் சொல்கிறது

அமெரிக்காவுடன் புதிய உறவை ஏற்படுத்துவதற்கு தயாராக இருப்பதாக ஈரான் வெளியுறவு மந்திரி ஜாவத் ஷாரிப் அறிவித்துள்ளார்.

டெஹ்ரான்:

ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தில், தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரான் ஒப்புக் கொண்டது. அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்த வல்லரசு நாடுகள் ஒப்புக்கொண்டன.

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பிறகு அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக கடந்த 2018-ம் ஆண்டு அறிவித்தாா். மேலும், ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்தினாா். இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் போய் ஜோ பைடன் நிர்வாகம் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளது. ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு இணங்கி நடந்தால் அமெரிக்கா மீண்டும் அந்த ஒப்பந்தத்தில் இணையும் என்று ஜோ பைடனின் நிர்வாகம் அண்மையில் அறிவித்தது.

இந்த நிலையில் அமெரிக்காவுடன் புதிய உறவை ஏற்படுத்துவதற்கு தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் வெளியுறவு மந்திரி ஜாவத் ஷாரிப் கூறும்போது, ‘‘தோல்வியுற்ற டிரம்ப்பின் நிர்வாகக் கொள்கைகளைப் பயன்படுத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விரும்பவில்லை. அதனால் அமெரிக்காவுக்கு வாய்ப்பு உள்ளது. ஆனாலும் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு அமெரிக்கா திரும்பி வருவதற்கான நேரம் வரம்பற்றது அல்ல. ஜோ பைடன் நிர்வாகத்துக்கு வரையறுக்கப்பட்ட வாய்ப்புகள் உள்ளன. எனவே அமெரிக்காவுடன் புதிய உறவை ஏற்படுத்துவதற்கு ஈரான் தயாராக உள்ளது’’ என்றார்.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »