Press "Enter" to skip to content

இரண்டாம் உலகப் போரில் பங்கெடுத்த கேப்டன் டாம் மூர் காலமானார்

இரண்டாம் உலகப் போரில் பங்கெடுத்த கேப்டன் டாம் மூர் மறைவுக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத், பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

லண்டன்:

இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரரான கேப்டன் டாம் மூர், உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். இவருக்கு வயது 100. 

கொரோனா பேரிடர் காலத்தில் முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கு நிதி திரட்டுவதற்காக தனது தோட்டத்தில் ஊன்றுகோலின் உதவியோடு 100 சுற்றுகள் நடந்து அதனை காணொளியாக வெளியிட்டார். இதன்மூலம் 53 மில்லியன் டாலர்கள் நன்கொடையாக பெற்று சாதனை படைத்தார்.

கடந்த 5 வருடங்களாக கேன்சர் நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த டாம் மூர், கடந்த ஜனவரி 22-ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து உடல்நிலை மேலும் மோசமாகி நேற்று உயிரிழந்தார். இதனையடுத்து அவரது குடும்பத்திற்கு இங்கிலாந்து ராணி எலிசபெத், பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இரங்கல் செய்தியில், டாம் மூர் ஒரு கதாநாயகன். உலகத்திற்கே நம்பிக்கையின் சின்னமாக விளங்கியவர் என தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்து ராணி எலிசபெத், அரச குடும்பத்தின் சார்பில் டாம் மூரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இவரது மறைவுக்கு அமெரிக்காவின் வெள்ளை மாளிகை சார்பில் இரங்கல் செய்தி வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »