Press "Enter" to skip to content

தமிழகத்திற்கு நாளை மத்திய குழு வருகை

அடைமழை (கனமழை)யினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்கு மத்திய குழு 4-ந்தேதி (நாளை) தமிழகம் வருகிறது. இரண்டு நாட்கள் தங்கி இருந்து சேதத்தை மதிப்பிடுகின்றனர்.

சென்னை:

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் பல இடங்களில் அடைமழை (கனமழை) பெய்தது. குறிப்பாக தூத்துக்குடி உள்ளிட்ட சில தென்மாவட்டங்கள் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகின.

இந்த சேதத்தை பார்வையிட்டு அவற்றை மதிப்பிட 2 குழுக்களை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முதல் மத்திய குழுவில், மத்திய பயிர் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணைச் செயலாளர் அசுதோஷ் அக்னிகோத்ரி, ஐதராபாத்தில் உள்ள மத்திய வேளாண்மைத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் எண்ணெய் வித்துக்கள் மேம்பாட்டு இயக்குநர் மனோகரன், மத்திய நிதித்துறையின் செலவீனங்கள் பிரிவின் இணை இயக்குநர் மகேஷ்குமார் ஆகியோர் உள்ளனர்.

இந்த குழுவினர் நாளை காலை 10 மணிக்கு மதுரை விமான நிலையத்துக்கு விமானம் மூலம் வருகின்றனர்.

அங்கிருந்து விருதுநகர் மாவட்டத்திற்கு சாலை மார்க்கமாக காரில் சென்று விருதுநகர் மாவட்டத்தில் மழையால் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை பார்வையிடுகின்றனர்.

அதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்திற்கு செல்லும் மத்திய குழுவினர், அங்கு மழையால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டு மதிப்பீடு செய்கின்றனர்.

பின்னர் தூத்துக்குடி மாவட்டத்துக்கு அவர்கள் பயணிக்கின்றனர். அங்கிருந்து ராமேஸ்வரத்துக்கு சென்று, அங்கு இரவில் தங்குகின்றனர்.

5-ந் தேதியன்று ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பை பார்வையிட்டுவிட்டு பின்னர் மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வரும் மத்திய குழுவினர் 5-ந்தேதியன்று இரவில் சென்னையில் தங்குகின்றனர்.

மழை சேதங்களை பார்வையிட்டு மதிப்பிடும் மத்திய குழுவினர் 6-ந்தேதி காலை 8.15 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கின்றனர்.

2-ம் மத்திய குழுவில், மீன்வள மேம்பாட்டுத்துறை ஆணையர் பால்பாண்டியன், மத்திய மின்சார ஆணையத்தின் உதவி இயக்குநர் ஷுபம் கார்க், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் மண்டல மேலாளர் ரணஞ்சே சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர் 4-ந் தேதி (நாளை) காலையில் 8.15 மணிக்கு விமானம் மூலம் திருச்சிக்கு வருகின்றனர். அங்கிருந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு செல்கின்றனர். அங்கு மழையால் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்தை பார்வையிடுகின்றனர்.

பின்னர் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சென்று மழை ஏற்படுத்திய சேதங்களை மதிப்பீடு செய்கின்றனர். 4-ந் தேதி இரவில் நாகப்பட்டினத்தில் அவர்கள் தங்குகின்றனர்.

5-ந் தேதியன்று நாகை மாவட்டத்தில் மழை சேதங்களை பார்வையிடும் மத்திய குழுவினர், பின்னர் அங்கிருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு செல்கின்றனர்.

அங்கு மழை சேதங்களை பார்வையிட்ட பிறகு கடலூர் மாவட்டத்திற்கு செல்கின்றனர். அங்கும் மழை சேதங்களை மதிப்பிட்ட பின்னர் இரவில் சென்னைக்கு வந்து, 6-ந்தேதி காலை விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கின்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »