Press "Enter" to skip to content

இறக்குமதி முறைகேடு வழக்கில் ஆங் சான் சூகியை 14 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

இறக்குமதி முறைகேடு வழக்கில் ஆங் சான் சூகியை 14 நாட்கள் காவலில் வைக்க தகினாத்திரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாங்கூன்:

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அந்த நாட்டு ராணுவம் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டியதோடு, தேர்தல் முடிவுகளை ஏற்கவும் மறுத்தது. ஆனால் ராணுவத்தின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை என கூறி தேர்தல் ஆணையம் அதை நிராகரித்தது.

இந்த விவகாரத்தில் மியான்மர் அரசுக்கும் அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் ராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியது.நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது.

அடுத்த ஒரு வருடத்துக்கு நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெறும் என்றும் அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு வெற்றியாளரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் ராணுவம் அறிவித்துள்ளது. மேலும் ஆங் சான் சூகி மீது இறக்குமதி முறைகேடு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தேசிய ஜனநாயகக் கட்சி செய்தித் தொடா்பாளா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

“தனது பதவிக் காலத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விதிமுறைகளை ஆங் சான் சூகி மீறியதாக அவா் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை வரும் 15-ஆம் தேதி வரை 14 நாள் காவலில் வைத்திருக்க தகினாத்திரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தேசிய பேரிடா் மேலாண்மை சட்டத்தை மீறியதாக அதிபா் வின் மியின்ட் மீதும் முறைகேடு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஆங் சான் சூகியின் இல்லத்தில் சோதனை நடத்திய ராணுவக் குழு, அங்கிருந்து 10 ‘வாக்கி டாக்கி’ கருவிகளையும், வேறு சில தகவல் தொடா்பு சாதனங்களையும் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. அந்த சாதனங்களை உரிய அனுமதியின்றி ஆங் சாங் சூகி இறக்குமதி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இறக்குமதி முறைகேடு வழக்கில் இதனை ஆதாரமாகப் பயன்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »