Press "Enter" to skip to content

இந்தியாவுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் அவதூறு பிரசாரங்கள் வெற்றி பெறாது – மத்திய மந்திரி ஜெய்சங்கர்

இந்தியாவுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் அவதூறு பிரசாரங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது என மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியை முற்றுகையிட்டு வட மாநில விவசாயிகள் 2 மாதங்களுக்கு மேல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு 11 சுற்றுகளாக நடத்திய பேச்சுவார்த்தையில் இதுவரை சுமூகமான தீர்வு எட்டப்படவில்லை.

குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக வழக்குகள் பதிவுசெய்து, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து விவசாயிகள் மீண்டும் 6-ம் தேதி தேசிய, மாநில நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதையொட்டி டெல்லி எல்லைகளுக்கு விவசாயிகள் அதிக அளவில் வருவதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, சர்வதேச பிரபலங்கள் பலரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக டுவிட்டரில் பதிவிட்டனர். அமெரிக்க பாடகி ரிஹானா, விவசாயிகளின் போராட்டம் பற்றிய செய்தியை பகிர்ந்து, “இதைப் பற்றி ஏன் நாம் பேசுவதில்லை?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். 

சுவீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் தனது டுவிட்டர் பக்கத்தில், “போராடி வரும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்போம்” என்று பதிவிட்டார். மேலும், அமெரிக்க துணைத் தலைவர் கமலா ஹாரிசின் வழக்கறிஞர் மருமகள் மீனா ஹாரிஸ், நடிகை மியா கலிஃபா, நடிகை அமேண்டா செர்னி உள்ளிட்ட பலர் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் அவதூறு பிரசாரங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது என வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர், இந்தியாவுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் அவதூறு பிரசாரங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது. அவற்றை இந்திய மக்கள் தூக்கி எறிவார்கள். இந்திய அரசுக்கு நம் விவசாயிகள் பாதுகாப்பில் அதிக அக்கறை இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »