Press "Enter" to skip to content

கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போதுமானது – ஆய்வில் கண்டுபிடிப்பு

கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போதுமானது என ஆய்வில் தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

புதுடெல்லி:

கொரோனாவுக்கு எதிராக பல்வேறு தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் அவை பொதுமக்களுக்கு வேகமாக போடப்பட்டு வருகின்றன. இதில் முக்கியமாக சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களுக்கே முன்னுரிமை அளித்து போடப்படுகின்றன.

தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள் பெரும்பாலும் 2 டோஸ்கள் ஒருவருக்கு போட வேண்டியுள்ளது. சில வார இடைவெளிகளில் அந்த 2 டோஸ்களையும் போட்டுக்கொண்டால் மட்டுமே ஒருவருக்கு தடுப்பூசி போடும் பணி முழுயடைகிறது.

ஆனால் தற்போது தடுப்பூசிகள் தயாரிப்பு தொடக்க கட்டத்திலேயே இருப்பதால், 2 டோஸ்கள் போடும் அளவுக்கு போதுமான டோஸ்கள் இன்னும் தயாரிக்கப்படவில்லை. எனவே ஒரு டோசிலேயே முடிப்பது தொடர்பான ஆய்வுகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன.

அந்தவகையில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அளவு மற்றும் அவர்களுக்கு எத்தனை டோஸ் தடுப்பூசி தேவைப்படும் என்பது போன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதில் அமெரிக்காவை சேர்ந்த லான் மருத்துவ பள்ளி பேராசிரியர் புளோரியன் கிராம்மர் உள்ளிட்ட ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்கனவே பதிவு செய்த மற்றும் செய்யாத 109 தனிநபர்களுக்கு ஒரு டோஸ் எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசி போடப்பட்டது. அப்போது கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகளை ஏற்கனவே வைத்திருந்த நபர்களுக்கு மிக விரைவான நோய் எதிிர்ப்பு தன்மையை தடுப்பூசி வெளிப்படுத்தியது.

இதைப்போல கொரோனாவில் இருந்து மீண்ட சுகாதார பணியாளர்களுக்கு பைசர் அல்லது மாடர்னா நிறுவனங்களின் தடுப்பூசி ஒடு டோஸ் போடப்பட்டது. இதில் தடுப்பூசி போடப்பட்ட 7 நாட்களில் அவர்களது ஆன்டிபாடி அளவு உச்சம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தடுப்பூசி பரிசோதனையில் கலந்து கொண்ட தன்னார்வலர்களிடம் செயலாற்றியதை விட கூடுதலாக இவர்களிடம் எதிர்வினை புரிந்ததும் தெரியவந்தது.

இதன் மூலம் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு ஒரு டோஸ் எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசி போட்டுக்கொண்டால் போதும் என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர். மேலும் கொரோனாவில் இருந்து மீண்டவர்களை தடுப்பூசி முன்னுரிமை பட்டியலில் கடைசியில் வைக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

எனினும் இந்த ஆய்வு முடிவுகள் இன்னும் பகுப்பாய்வு செய்யப்படவில்லை. அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. இந்த தகவல்கள் அனைத்தும் மருத்துவ ஆய்வு தளத்தில் விஞ்ஞானிகள் வெளியிட்டு உள்ளனர்.

இந்த 2 ஆய்வு முடிவுகளும் மிகவும் உறுதியானவை என இங்கிலாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழக தொற்றுநோய் பிரிவு பேராசிரியர் எலீனர் ரிலே கூறியுள்ளார். எனினும் ஒருவருக்கு 2 டோஸ் தடுப்பூசி போடுவதே பாதுகாப்பை உறுதி செய்யும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »