Press "Enter" to skip to content

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.25 அதிகரிப்பு

சென்னையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்ந்து ரூ.735-க்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சென்னை:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்கா டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றை கணக்கிட்டு சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலையை மாதத்திற்கு ஒரு முறை முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகின்றன.

அந்தவகையில் நடப்பு மாதம் முதல் தேதியில் வீட்டு சிலிண்டர்களுக்கான விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர்களின் விலை சென்னையில் ரூ.91 அதிகரித்து ரூ.1,649 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

வீட்டு சிலிண்டர்கள் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இந்த நிலையில் நேற்று வீடுகளுக்கு வினியோகிக்கப்பட்ட 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக மானியமில்லாத சிலிண்டர் விலை ரூ.25 விலை அதிகரிக்கப்பட்டு இருந்தது. இதனால் கடந்த மாதம் ரூ.710-க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டர் ரூ.735-க்கு வினியோகிக்கப்பட்டது.

டெல்லி, மும்பையில் ரூ.719, கொல்கத்தாவில் ரூ.745.50 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் தான் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. வரும் மாதங்களிலும் விலை ஏறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சென்னையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கடந்த மாத இறுதியில் இருந்து மானியமாக ரூ.24 மட்டுமே வந்து உள்ளது. ஒரு சிலருக்கு அவர்களுடைய வங்கி கணக்கில் மானியமே வரவில்லை என்ற நிலையும் இருந்து வருகிறது. எண்ணெய் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வங்கி கணக்கில் மானியம் முறையாக செலுத்தப்படுகிறதா? என்பதையும் கண்காணிக்க வேண்டும் என்றும் இல்லத்தரசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »