Press "Enter" to skip to content

நவால்னிக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கேற்ற 3 ஐரோப்பிய தூதர்களை வெளியேற்றியது ரஷ்யா

எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னிக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்துகொண்டதால் 3 ஐரோப்பிய தூதர்களை ரஷ்யா வெளியேற்றியுள்ளது.

மாஸ்கோ:

ரஷ்ய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவால்னி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரசாயன தாக்குதலுக்கு ஆளானார்.

இதில் கோமா நிலைக்கு சென்ற நவால்னி, ஜெர்மனியில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.‌ அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 17-ம் தேதி ஜெர்மனியில் இருந்து ரஷ்யா திரும்பிய அவரை விமான நிலையத்தில் வைத்து காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையடுத்து மோசடி வழக்கு ஒன்றில் பரோல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் நவால்னிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ரஷ்ய நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை எனக்கூறி ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவை கண்டித்தன. மேலும் நவால்னியை உடனடியாக விடுவிக்கவில்லை என்றால் பொருளாதார தடைகள் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுப்பினர்கள் எச்சரித்தனா். 

அலெக்சி நவால்னியை விடுதலை செய்யக்கோரி கடந்த மாதம் 23 மற்றும் 31 ஆகிய தேதிகளில் ரஷ்யாவில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதற்கிடையே, 23-ந் தேதி நடைபெற்ற போராட்டத்தில் ஜெர்மனி, சுவீடன் மற்றும் போலந்து ஆகிய நாடுகளின் தூதர்கள் பங்கேற்றதாக அண்மையில் தகவல் வெளியானது.‌ இதனை ரஷியா வன்மையாக கண்டித்தது.

இந்நிலையில், சட்டவிரோத போராட்டங்களில் பங்கேற்றதாகக் கூறி மேற்கூறிய 3 நாடுகளின் தூதர்களையும் ரஷ்யா நேற்று வெளியேற்றியது.

ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு சம்பந்தப்பட்ட 3 நாடுகள் தவிர இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளும், ஐரோப்பிய கூட்டமைப்பும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »