Press "Enter" to skip to content

மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா தலைவர் நட்டா வாகன பேரணி- மம்தா மீது குற்றச்சாட்டு

மேற்கு வங்காளத்தில் வாகன பேரணி நடத்திய பா.ஜனதா தலைவர் நட்டா, முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை குற்றம் சாட்டினார்.

மால்டா:

மேற்கு வங்காளத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பதற்காக பா.ஜனதா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநில விவசாயிகள் மத்தியில் கட்சியை கொண்டு சேர்க்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இதற்காக விவசாயிகள் பாதுகாப்பு பிரசாரம் என்ற பெயரில் ஒரு மாதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இதை ஏற்கனவே தொடங்கி வைத்திருந்த பா.ஜனதா தேசிய தலைவர் நட்டா, இதன் இறுதிச்சுற்று பிரசாரத்தில் நேற்று பங்கேற்றார்.

இதையொட்டி மால்டாவில் மாபெரும் வாகன பேரணி ஒன்று நடந்தது. இதில் அலங்கரிக்கப்பட்ட பார வண்டியில் நின்றவாறு பேரணியை தலைமையேற்று நடத்தினார். இந்த பேரணியில் ஏராளமான பா.ஜனதா தொண்டர்கள் கலந்து கொண்டு ‘ஜெய்ஸ்ரீராம’ எனவும் ‘நரேந்திர மோடி வாழ்க’ எனவும் கோஷங்கள் எழுப்பினர். அத்துடன் விவசாயிகளுடன் சமூக விருந்து நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதில் திறந்த வெளியில் விவசாயிகளுடன் நட்டா அமர்ந்து விருந்து உண்டார்.

முன்னதாக இந்த விவசாயிகள் பாதுகாப்பு பிரசாரத்தில் பேசிய அவர், மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை கடுமையாக குற்றம் சாட்டினார்.

அவர் கூறுகையில், ‘பிரதமர் கிசான் திட்டத்தை மேற்கு வங்காளத்தில் அமல்படுத்தாமல் மாநில விவசாயிகளை மம்தா பானர்ஜி வஞ்சித்து விட்டார். இந்த திட்டத்தை அமல்படுத்த அவரது ஈகோ இடம்கொடுக்கவில்லை. இதனால் 70 லட்சம் விவசாயிகள் கடந்த 2 ஆண்டுகளில் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது விவசாயிகளே நேரடியாக அந்த திட்டத்தில் பங்கேற்றதாலும், தேர்தல் நெருங்குவதாலும், தானே அந்த திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக அறிவித்து உள்ளார்’ என்று கூறினார்.

கடந்த 23-ந் தேதி நேதாஜி பிறந்தநாள் விழாவில் பா.ஜனதா தொண்டர்கள் ஜெய்ஸ்ரீராம் கோஷமிட்டதால், பிரதமர் முன்னிலையில் மம்தா பேச மறுத்ததை சுட்டிக்காட்டிய நட்டா, ‘விவசாயிகளுக்கு சேவையாற்றி இருந்தால், நீங்கள் பொறுமை இழந்திருக்கமாட்டீர்கள்’ என்றும் தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »