Press "Enter" to skip to content

15 நாட்களில் பயிர் கடன் தள்ளுபடி ரசீது வழங்கப்படும்- எடப்பாடி பழனிசாமி

பயிர் கடன் தள்ளுப்படிக்கான ரசீது 15 நாட்களில் வழங்கப்படும் என அரக்கோணத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அரக்கோணம்:

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கைனூரில் எடப்பாடி பழனிசாமி இன்று தனது 5-வது பிரசார பயணத்தை தொடங்கினார்.

அப்போது அங்கிருந்த மகளிர் குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்ற காலத்திலிருந்து கிராமப்புறத்தில் இருக்கின்ற மகளிர் முதல் அனைத்து மகளிருக்கும் சொந்தமாக தொழில் துவங்க சுய உதவி குழு உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் மட்டும் 7404 குழுக்கள் உள்ளன. ரூ.288 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

கடன் பெற்ற அனைத்து மகளிர் சுயஉதவி குழு மிக சிறப்பாக செயல்பட்டு வாங்கிய கடனை சரியான முறையிலே உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்துகின்றனர்.

சுய உதவி குழு பெண்கள் சொந்தக்காலில் நின்று குடும்ப பாரத்தை சுமந்து வருகின்றனர்.

தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். 12.5 லட்சம் மகளிருக்கு ஒரு சவரன் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி, மடிக்கணினி எல்லாம் கொடுத்தது அம்மா அரசு. ஒவ்வொரு குடும்பத்துக்கும் சிறப்பான கல்வி கிடைக்கவேண்டும். எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று அற்புதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

கிராமம் அதிகம் நிறைந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளிகள் என தரம் உயர்த்தப்பட்டு அந்தப் பகுதியிலேயே உயர்கல்வி படிக்க கூடிய சூழ்நிலையை உருவாக்கி உள்ளோம்.

இந்த ஆட்சியில் ஒண்ணுமே நடக்கல மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்று ஒரு தவறான பொய்யான பிரசாரத்தை ஸ்டாலின் செய்து வருகிறார்.

பத்திரிகைகளில் கொடுக்கப்பட்டு வரும் விளம்பரங்கள் குறித்து ஸ்டாலின் பேசி வருகிறார். நாங்கள் என்ன செய்தோம் என்று உங்களுக்கு தெரியவில்லை. அந்த திட்டங்கள் பற்றி ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சியினர் தெரிந்து கொள்வதற்காகவே விளம்பரம் செய்து வருகிறோம்.

நாட்டில் என்ன நடக்கிறதென எதிர்க்ட்சி தலைவர் ஸ்டாலினுக்கு தெரியவில்லை.

கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டுவந்து கல்வித் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. பாலிநுட்பம் கல்லூரி, வேளாண்மை கல்லூரி, கால்நடை மருத்துவ கல்லூரி அதுமட்டுமில்லாமல் மருத்துவ படிப்பில் படிக்க கூடிய அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வாங்கி தந்துள்ளோம்.

இதுபற்றி எல்லாம் தெரியாமல் ஸ்டாலின் பேசி வருகிறார். விவாதத்திற்கு வர நான் தயாராகத்தான் உள்ளேன். மு.க.ஸ்டாலினை விவாதத்திற்கு அழைத்தால் வர மறுக்கிறார். எம்.எல்.ஏ., மேயர், உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை முதல்வராக இருந்த போது மக்களை சந்திக்காத அவர் இப்போது மக்களிடம் மனு வாங்கி வருகிறார். அவரிடம் கொடுக்கும் மனுவால் எந்த பயனும் இல்லை. நிச்சயமாக ஸ்டாலினால் முதல்வராக முடியாது.

ரூ.12,110 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறித்து ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கான அரசாணை நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தெரியாமல் அவர் பேசி வருகிறார்.

பயிர் கடன் ரத்து மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள். பயிர்கடன் தள்ளுப்படிக்கான ரசீது 15 நாட்களில் வழங்கப்படும்.

வெயில், மழை, பனி என்று பாராமல் உழைக்கும் உழைப்பாளிகள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காக கடனை ரத்து செய்துள்ளோம்.

எதை சொன்னாலும் அதை செய்யக்கூடிய அரசு அம்மாவின் அரசு. தமிழகம் முழுவதும் 5 லட்சம் முதியவர்களுக்கு உதவி தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தேன். 95 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 5 சதவீதம் பேருக்கு தான் வழங்க வேண்டும். அவர்களுக்கு விரைவில் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »