Press "Enter" to skip to content

‘அ.தி.மு.க. ஆட்சியில் குறைகளை கண்டுபிடிக்க பூதக்கண்ணாடி தேவையில்லை’- மு.க.ஸ்டாலின் பேச்சு

அ.தி.மு.க. ஆட்சியில் குறைகளை கண்டுபிடிக்க பூதக்கண்ணாடி தேவையில்லை என்றும், கண்ணை மூடிக்கொண்டே கண்டுபிடித்துவிடலாம் என்றும் மு.க.ஸ்டாலின் பேசினார்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி குப்பம் ஊராட்சி, காரணையில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பிரசார நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சி அமைவது என்பது உங்களது கவலைகளை தீர்ப்பதற்காகத்தான். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகத்தான்.

உங்களது எண்ணங்களை அமல்படுத்துவதற்காகத்தான் என்பதை மக்கள் முதலில் உணர்ந்திருக்கிறார்கள்.

2016-ம் ஆண்டு அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அனைவருக்கும் கைபேசி தரப்படும் என்று சொன்னார்களே? செய்தார்களா? இல்லை. எடப்பாடி பழனிசாமி கொடுத்தாரா? இல்லை.

அல்வா தான் கொடுத்துக்கொண்டு இருக்கிறார். ‘எல்லா மக்கள் குறையையும் நான் தீர்த்துவிட்டேன். ஸ்டாலினிடம் மக்கள் மனு கொடுக்கவில்லை’ என்றும் எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார். மனு கொடுத்த நீங்கள் மக்கள் இல்லையா? வானத்தில் இருந்து குதித்து வந்துள்ளீர்களா?.

ஒரு முதல்-அமைச்சர் பேசுகிற பேச்சா இது? கடந்த 4 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி எதையும் செய்யவில்லை என்பதைத்தான் தமிழ்நாட்டு மக்கள் தங்கள் மனுக்களின் மூலமாக சொல்லி வருகிறார்கள். இந்த லட்சணத்தில் பூதக்கண்ணாடி வைத்து பார்த்தாலும் தனது ஆட்சியில் எந்த குறையும் ஸ்டாலினால் கண்டுபிடிக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் குறைகளை கண்டுபிடிக்க பூதக்கண்ணாடி தேவையில்லை. கண்ணை மூடிக்கொண்டு இருந்தாலே கண்டுபிடித்துவிடலாம். என்னை ஒருமையில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுவதற்காக எனது தகுதி குறைந்துவிடப் போவதில்லை.

அண்ணா ஒரு கதை சொல்வார். கோவில் யானை ஒன்றை குளிப்பாட்டி பாகன் அழைத்து சென்றபோது, எதிரே சாக்கடையில் விழுந்து உருண்டுவிட்டு வந்தபன்றியை பார்த்து யானை ஒதுங்கி சென்றதாம். அப்போது யானை தன்னை பார்த்து பயந்து ஒதுங்கிச் செல்வதாக பன்றி நினைத்து கொண்டதாம். அதுபோலத்தான் இவர்களை பார்த்து நாம் ஒதுங்கி செல்கிறோம்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது தெருத்தெருவாகப் போய், நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று எடப்பாடி பழனிசாமி சொன்னாரே. துரும்பையாவது நகர்த்தினீர்களா?. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின்போது விழுப்புரம் நகரத்துக்கு விரிவாக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் வரும் என்றீர்கள். ஒப்பந்தம் விட்டு ஒன்றரை ஆண்டாகி விட்டது. ஏன் இதுவரை பணிகள் தொடங்கவில்லை?

விழுப்புரம் நகராட்சியையாவது, சிறப்புநிலை நகராட்சி ஆக்கினீர்களா? அதுவும் இல்லை. 10 ஆண்டுகள் ஆகியும் விழுப்புரத்துக்கு சுற்றுவட்ட சாலை வந்ததா? இல்லை. முதல்-அமைச்சர் ஒரு உதவாக்கரை. மந்திரிகள் உளறுவாயர்கள். இப்படிப்பட்ட ஆட்களிடம் இருந்து கோட்டையை மீட்பதற்கான தேர்தல் தான் இந்த தேர்தல். இவர்கள் பொதுமக்களின் குறைகளை கேட்கவும் மாட்டார்கள். பொதுமக்களின் குறைகளை தீர்க்கவும் மாட்டார்கள். இவர்கள் மக்களை பற்றி நினைக்கவும் மாட்டார்கள். மக்களோடு இருக்கவும் மாட்டார்கள். இந்த மக்கள் விரோத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, மக்களாட்சிக்கு தொடக்கப்புள்ளி வைக்க வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »