Press "Enter" to skip to content

வண்ணாரப்பேட்டை-விம்கோநகர் மெட்ரோ தொடர் வண்டி சேவை திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

ரூ.3770 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட வண்ணாரப்பேட்டை-விம்கோநகர் மெட்ரோ தொடர் வண்டி சேவை திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை:

சென்னையில் வண்ணாரப்பேட்டை- விம்கோநகர் இடையே ரூ.3770 கோடியில் மெட்ரோ தொடர் வண்டி திட்டம் விரிவாக்கம் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று மேலும் 2 தொடர் வண்டி திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் ரூ.4,486 கோடி செலவில் 3 தொடர் வண்டி திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளது.

ரூ.2,640 கோடி செலவில் கல்லணை கால்வாய் சீரமைப்பு திட்டம் மற்றும் ரூ. ஆயிரம் கோடி செலவில் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பம் சார்பில் ஆராய்ச்சி வளாகம் அமைக்கும் திட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த 5 திட்டங்கள் தொடர்பாக சமீபத்தில் டெல்லி சென்று இருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தினார்.

முடிக்கப்பட்ட திட்டங்களை தொடங்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து பிரதமர் மோடி வருகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பிரதமர் பங்கேற்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று காலை 7.50 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டார்.

பிரதமர் மோடியின் விமானம் சென்னையில் காலை 10.35 மணிக்கு தரை இறங்கியது. விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். பிறகு பிரதமர் மோடியும், ஆளுநர் பன்வாரிலாலும் உலங்கூர்தியில் ஏறி நேப்பியர் பாலம் அருகில் உள்ள ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளத்துக்கு புறப்பட்டனர்.

பின்னர், பிரதமர் மோடியின் உலங்கூர்தி கடற்படை தளத்தில் தரை இறங்கியது. அங்கு அவரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். அதன்பிறகு பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தலைவர்கள் கார்களில் நேரு உள் விளையாட்டு அரங்கத்துக்கு புறப்பட்டனர்.

அவர்கள் தேர் அணி வகுப்பு தீவுத்திடல், கொடிமரச்சாலை, முத்துசாமி பாலம், ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை, சென்ட்ரல், மாநகராட்சி ரிப்பன் மாளிகை வழியாக நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு சென்றனர். வழியில் 5 இடங்களில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

சுமார் 11.35 மணியளவில் பிரதமர் மோடி நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு வந்து சேர்ந்தார். இதையடுத்து உடனடியாக விழா தொடங்கியது.

விழாவில் 3 புதிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சென்னை மெட்ரோ தொடர் வண்டி முதல்கட்ட விரிவாக்கத் திட்டமானது வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை ரூ.3770 கோடியில் நிறைவடைந்துள்ளது. சுமார் 9 கி.மீ. நீளமுள்ள இந்த மெட்ரோ தொடர் வண்டி பாதையானது, வடசென்னை பகுதியை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை மற்றும் அத்திப்பட்டு இடையிலான நான்காவது தொடர் வண்டி பாதையானது ரூ.293.40 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இடையிலான பயணம் எளிமையாகும். சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களை இணைக்கும் வகையிலான இந்த திட்டத்தால் தொடர் வண்டி பயணம் எளிதாகும்.

விழுப்புரம்- கடலூர்- மயிலாடுதுறை -தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை- திருவாரூர் இடையிலான ஒற்றை வழி தொடர் வண்டி பாதையானது ரூ.423 கோடியில் மின்வழித்தடமாக மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.14.61 லட்சம் அளவுக்கு தினமும் எரிபொருள் சேமிக்கப்படும்.

இந்த 3 திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.4,486.40 கோடியாகும். இந்தப் புதிய திட்டங்கள் அனைத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

முன்னதாக, முழுவதும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட அர்ஜூன் போர் டாங்கியை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த தளவாடமானது 15 கல்வி நிறுவனங்கள், 8 ஆய்வகங்கள் மற்றும் பல்வேறு சிறு, குறு தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களால் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் ரூ.3,640 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கல்லணை கால்வாய் சீரமைப்பு மற்றும் புதுப்பித்தல் திட்டத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். இந்த திட்டம் ரூ.2,640 கோடியில் செயல்படுத்தப்படும். இதன்மூலம் காவிரி டெல்டா பகுதிகளுக்கு நீரைக் கொண்டு செல்வது எளிதாகும்.

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகம் சார்பில் ரூ.1,000 கோடியில் ஆராய்ச்சி வளாகம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சென்னையை அடுத்த தையூரில் 2 லட்சம் சதுர மீட்டரில், மிகப்பெரிய வளாகம் கட்டப்படுகிறது. இதற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »