Press "Enter" to skip to content

பிரதமர் மோடி தலைமையில் இன்று ‘நிதி ஆயோக்’ கூட்டம்

பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் ஆட்சி மன்ற குழு கூட்டம் நடக்கிறது. மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்கும் இக்கூட்டத்தை மம்தா பானர்ஜி புறக்கணிக்கிறார்.

புதுடெல்லி:

நாடு முழுவதும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அமைப்பாக திட்ட கமிஷன் இருந்து வந்தது. கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சிக்கு வந்தவுடன், திட்ட கமிஷன் கலைக்கப்பட்டது.

அதற்கு பதிலாக ‘நிதி ஆயோக்’ என்ற அமைப்பு கொண்டு வரப்பட்டது. அரசின் கொள்கைகளை வடிவமைக்கும் அமைப்பாக இயங்கி வருகிறது.

நிதி ஆயோக்கின் உயரிய அமைப்பாக ஆட்சி மன்ற குழு உருவாக்கப்பட்டது.

பிரதமர் தலைமையில் அக்குழு இயங்கி வருகிறது. அனைத்து மாநில முதல்-மந்திரிகள், யூனியன் பிரதேச ஆளுநர் கள், மத்திய மந்திரிகள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் அதில் இடம்பெற்றுள்ளனர்.

ஆட்சி மன்ற குழுவின் முதல் கூட்டம், கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி 8-ந்தேதி நடைபெற்றது. அதன்பிறகு ஆண்டுதோறும் அதன் கூட்டம் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் கொரோனா தாக்கம் காரணமாக நடைபெறவில்லை.

இந்தநிலையில், நிதி ஆயோக் ஆட்சி மன்ற குழுவின் 6-வது கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். அதில், மாநில முதல்-மந்திரிகள் பலர் பங்கேற்கிறார்கள்.

இதுவரை மாநிலமாக பங்கேற்று வந்த காஷ்மீர், இந்த தடவை, யூனியன் பிரதேசமாக பங்கேற்கிறது. காஷ்மீரில் இருந்து பிரிக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசம் முதல்முறையாக இக்கூட்டத்தில் கலந்து கொள்கிறது. யூனியன் பிரதேசங்களின் சார்பில் ஆளுநர் கள் பங்கேற்கிறார்கள்.

வேளாண்மை, உள்கட்டமைப்பு, பொருள் உற்பத்தி, மனிதவள மேம்பாடு போன்றவை தொடர்பான விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

இன்றைய கூட்டத்தில் மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பங்கேற்க மாட்டார். இந்த தகவலை திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். நிதி ஆயோக்கின் முந்தைய கூட்டங்களையும் மம்தா பானர்ஜி புறக்கணித்துள்ளார்.

நிதி ஆயோக்குக்கு நிதி அதிகாரம் கிடையாது என்றும், அந்த அமைப்பால் மாநில அரசுகளின் திட்டங்களுக்கு உதவ முடியாது என்றும் அவர் ஏற்கனவே கூறியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »