Press "Enter" to skip to content

உத்தரகாண்ட் வெள்ளத்தில் தந்தையை இழந்த 4 குழந்தைகளை தத்தெடுத்த நடிகர் சோனு சூட்

உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவரின் நான்கு மகள்களை நடிகர் சோனு சூட் தத்தெடுத்துள்ளார்.

டேராடூன்:

உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தின் ஜோஷிடம் அருகே நந்தாதேவி பனிப்பாறையின் ஒரு பகுதி கடந்த 7-ம்  தேதி திடீரென உடைந்ததால் பெரும் பனிச்சரிவும், வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டது. இதனால் அலெக்நந்தா ஆற்றில் பெரும் பிரளயமே ஏற்பட்டது.

அங்கு அமைக்கப்பட்டிருந்த ரிஷிகங்கா நீர்மின் நிலையம் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டது. மேலும் தபோவன்-விஷ்ணுகாட் அனல்மின் நிலைய சுரங்கங்கள் சேதமடைந்தன. இதனால் அங்கு பணியாற்றி வந்த 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், சுரங்கங்களிலும் சிக்கிக்கொண்டனர்.

இந்த பேரிடரில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை ராணுவம், தேசிய, மாநில பேரிடர் மீட்புப்படை என மிகப் பெரும் மீட்புக்குழுவினர் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இரவு-பகலாக மேற்கொண்டு வருகின்றனர். இதில் உயிருடன் இருந்தவர்கள் ஏற்கனவே மீட்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

வெள்ளப் பெருக்கில் தபோவன் ஹைட்ரோபவர் திட்டத்தில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்த ஆலம் சிங் புண்டிர் என்பவர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தார். அவரின் வருமானமே குடும்பத்தைக் காப்பாற்றி வந்த நிலையில் திடீர் பேரிழப்பால் மனைவி உள்பட 4 பெண் குழந்தைகளும் நிலைகுலைந்து போயினர்.

இந்நிலையில், உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவரின் நான்கு மகள்களை நடிகர் சோனு சூட் தத்தெடுத்துள்ளார்.

சமூக வலைதளங்களில் வைத்த கோரிக்கையை ஏற்று சோனு சூட் உயிரிழந்த ஆலம் சிங்கின் அஞ்சல், அந்தரா, காஜல், அனன்யா ஆகிய 4 பெண் குழந்தைகளின் படிப்புச் செலவை ஏற்றதோடு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளையும் செய்வதாக சோனு சூட் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, நடிகர் சோனு சூட் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ‘இனி இந்தக் குடும்பம் என்னுடையது’ என பதிவிட்டுள்ளார்.

நடிகர் சோனு சூட் பகைவன் நடிகரை ரியல் கதாநாயகனாக காட்டியது, கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர் செய்த உதவிகள் தான்.

தனது சமூக வலைதளங்களில் கோரிக்கை வைப்பவர்களுக்கு மருத்துவ உதவிகள், கல்விக்கான உதவிகள் என்று தனது கரங்களை நீட்டி வரும் சோனு சூட்டுக்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு குவிந்து வருகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »