Press "Enter" to skip to content

புதிய பாராளுமன்றம் கட்டுவது தேவையில்லாத ஒன்று: சுப்ரியா சுலே தாக்கு

தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் முழுமையாக குறையாத நிலையில் புதிய பாராளுமன்றம் கட்டுவது தேவையில்லாத ஒன்று என்று தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே குற்றம்சாட்டினார்.

மும்பை :

இந்தியாவின் தற்போதைய பாராளுமன்ற கட்டிடம் 94 ஆண்டுகள் பழமையானது. இதை கட்டும்போது ரூ.83 லட்சம் செலவானது. இந்த கட்டிடத்தை இடிக்காமல் அதனையொட்டி 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் புதிய பாராளுமன்றம் முக்கோண வடிவில் கட்டப்பட உள்ளது. இதற்காக ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் புதிய பாராளுமன்றக் கட்டிடம், மத்திய தலைமை செயலகம் ஆகியவை கட்டப்பட உள்ளன.

அதி நவீன வசதிகளுடன் கட்டப்படும் புதிய பாராளுமன்றம் கட்டும் திட்டத்தின் மதிப்பு ரூ.971 கோடியாகும். 21 மாதங்களில் அதாவது 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 75-வது சுதந்திர தினம் கொண்டாடுவதற்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டம் அம்பர்நாத் நகரில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்காக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சுப்ரியா சுலே நேற்று சென்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய விஸ்டா திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.800 முதல் ரூ.1000 கோடி செலவிடப்போகிறது.

புதிய பாராளுமன்றம் கட்டுங்கள் என்று எம்.பி.க்கள் கேட்கவில்லையே. தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் முழுமையாக குறையாத நிலையில் புதிய பாராளுமன்றம் கட்டுவது தேவையில்லாத ஒன்று.

எம்.பி.க்களுக்கான நிதியை ரத்து செய்துவிட்டு புதிய பாராளுமன்றம் கட்டுகிறது மத்திய அரசு. எங்களின் நிதியில் மக்களுக்கு பயன்படும் வகையில் ஆஸ்பத்திரி கட்டப்போகிறோம் என்றால் 5 ஆண்டுகளுக்கும் ரத்து செய்துவிடுங்கள் என்று நான் மகிழ்ச்சியுடன் கொடுத்திருப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »