Press "Enter" to skip to content

மேற்கு வங்காள தேர்தல்- 20 பொதுக்கூட்டங்களில் மோடி பேசுகிறார்

பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட பா.ஜனதா தேசிய தலைவர்கள் மேற்கு வங்காளத்தில் 700-க்கும் அதிகமான பொதுக்கூட்டங்களில் பேச திட்டமிடப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் பா.ஜனதா அதிக கவனம் செலுத்தி வருகிறது.

கொல்கத்தா:

294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள மாநிலத்தில் வருகிற 27-ந் தேதி முதல் ஏப்ரல் 29-ந் தேதி வரை 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.

இங்கு மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்சி தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது.

மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தாவை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற வேட்கையில் பா.ஜனதா தீவிரமாக உள்ளது. இதேபோல 3-வது அணியாக இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து உள்ளன.

“மி‌ஷன் மேற்கு வங்காளம்” என்ற பெயரில் அங்கு ஆட்சியை வெல்லும் நோக்கத்தில் பா.ஜனதா மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக தலைவர்கள் பட்டாளத்தையே அங்கு அனுப்பி வைத்துள்ளது.

மம்தா கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சமீப காலமாக அதிக அளவில் பா.ஜனதாவில் இணைந்து வருகிறார்கள். இதனால் திரிணாமுல் காங்கிரஸ்-பா.ஜனதா இடையே பனிப்போர் நடந்து வருகிறது.

இந்த நிலையில் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்காளத்தில் 20 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். வருகிற 7-ந்தேதி முதல் அவரது பிரசாரம் தொடங்கும். ஏற்கனவே மோடி மேற்கு வங்காளத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து ஆதரவு திரட்டி இருந்தார்.

இதேபோல மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் அங்கு தலா 60 கூட்டங்களில் பங்கேற்க உள்ளனர். இந்த 3 தலைவர்களும் மேற்கு வங்காளத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பிரசாரம் செய்து பா.ஜனதாவுக்கு தீவிரமாக ஆதரவு திரட்டுகிறார்கள்.

மேலும் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் அங்கு 10 நாட்கள் பிரசாரம் செய்கிறார். இதுதவிர உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்களும் அங்கு முகாமிட்டு பிரசாரம் மேற்கொள்கிறார்கள்.

பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட பா.ஜனதா தேசிய தலைவர்கள் மேற்கு வங்காளத்தில் 700-க்கும் அதிகமான பொதுக்கூட்டங்களில் பேச திட்டமிடப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் பா.ஜனதா அதிக கவனம் செலுத்தி வருகிறது.

இதுதொடர்பாக பா.ஜனதா தேசிய நிர்வாகி ஒருவர் கூறும்போது, “மேற்கு வங்காள வெற்றியின் மூலம் இந்தி பேசாத மாநிலங்களில் எங்கள் கட்சியின் முதல் வெற்றியாக அது அமையும். எனவே பிரதமர் மோடி உள்ளிட்ட அனைவருமே தேவைக்கு ஏற்ப பொதுக்கூட்டம் எண்ணிக்கையை அதிகரிக்க தயாராக உள்ளனர். இதற்காக பா.ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் இருந்தும் தொண்டர்களை அழைக்க உள்ளோம்” என்றார்.

மேலும் அவர் கூறும்போது, “பிரதமர் மோடியின் பிரசாரம் மேற்கு வங்காளத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றார்.

மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் மொத்தம் 5 கட்சிகள் இடம் பெற்று உள்ளன.

கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா மேற்கு வங்காள மாநிலத்தில் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் 2019 பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 18 இடங்களை கைப்பற்றியது. அதாவது 40.7 சதவீத வாக்குகளை பெற்றது. சட்டசபை இடைத்தேர்தலிலும் அந்த கட்சிக்கு ஆதரவு இருந்தது.

இதனால் இந்த முறை மேற்கு வங்காளத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி கொள்ள முடியும் என்று பா.ஜனதா கருதுகிறது. இதற்காக பல்வேறு வியூகங்களை அமைத்து உள்ளது. இதன்படிதான் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை அதிக அளவில் பிரசாரத்தில் ஈடுபடுத்துகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »