Press "Enter" to skip to content

சென்னையில் தினசரி 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

சென்னை ஐ.சி.எப்-ல் இருந்து தமிழக தேர்தல் பணிகளுக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள 7 ஆயிரம் ஊழியர்களுக்காக இந்த சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஐ.சி.எப்-ல் இருந்து தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை, சென்னை அயனாவரத்தில் உள்ள ஐ.சி.எப். மருத்துவமனையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனருமான கோ.பிரகாஷ் நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சென்னை ஐ.சி.எப்-ல் இருந்து தமிழக தேர்தல் பணிகளுக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள 7 ஆயிரம் ஊழியர்களுக்காக இந்த சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று (நேற்று) முதல் 12 நாட்களுக்கு அனைத்து தேர்தல் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள ஐ.சி.எப். ஊழியர்களுக்கும் தடுப்பூசி போட்டு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் மாநகராட்சி சுகாதாரத்துறை கொரோனா தடுப்பூசி போடும் பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு சென்னை மாநகராட்சியில் வசதிகள் உள்ளன. தற்போது 20 ஆயிரம் என்ற இலக்கை எட்டி உள்ளோம். இதனை 35 ஆயிரமாக்குவதற்கு நிறைய முயற்சிகள் எடுத்து வருகிறோம்.

முன்பு 1,200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற நிலையில், சென்னை மாநகராட்சியில் 3 ஆயிரத்து 500 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது விதிமுறைகள் தளர்த்தி, 1,050 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனால் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையும் 6 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதற்கேற்றது போல் தேர்தல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் சென்னையில் 35 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இதில் 5 ஆயிரம் பேரை அருகில் உள்ள மாவட்டங்களுக்கு தேர்தல் பணிகளுக்காக அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின்போது தெற்குதொடர்வண்டித் துறை பொது மேலாளர் ஜான் தாமஸ், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.மேகநாத ரெட்டி, துணை கமிஷனர் மருத்துவர் ஆல்பி ஜான் வர்கீஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »