Press "Enter" to skip to content

நாடாளுமன்ற கலவரத்தின் போது துப்பாக்கி விளம்பரங்கள் – விளக்கம் கேட்டு பேஸ்புக் நிறுவனருக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம்

தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் பலியாகினர்.

வாஷிங்டன்:

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் வழங்குவதற்காக கடந்த ஜனவரி மாதம் 6-ந்தேதி அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டம் நடைபெற்றது.

அப்போது தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் பலியாகினர்.

இதனிடையே நாடாளுமன்ற கலவரத்தின் போது பேஸ்புக்கில் துப்பாக்கிகளை வாங்க வலியுறுத்தும் விளம்பரங்கள் காட்டப்பட்டதாக தெரிகிறது. மேலும் கலவரத்தின் போது ஜனாதிபதி தேர்தல் குறித்த தவறான தகவல்கள் பேஸ்புக்கில் வலம் வந்ததாகவும் கூறப்படுகிறது.

இது வன்முறையை தூண்டும் செயல் என பேஸ்புக் நிறுவனம் மீது ஜனநாயக கட்சியினர் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் நாடாளுமன்ற கலவரத்தின் போது பேஸ்புக்கில் துப்பாக்கி விளம்பரங்களை காட்டியது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்கக்கோரி ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் 23 பேர் பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்குக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

அந்த கடிதத்தில் ‘‘சமீபத்திய சிக்கலான அறிக்கைகளின் படி ஜனவரி 6-ந்தேதி நாடாளுமன்ற கலவரத்தின் போது, கலவரம் குறித்த செய்திகளுக்கு அடுத்ததாக துப்பாக்கி மற்றும் அதன் பாகங்களை வாங்க வலியுறுத்தும் விளம்பரங்கள் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. இந்த வழியில் விளம்பரங்களை காட்டுவது ஆபத்தானது. மேலும் இது வன்முறை செயல்களை ஊக்குவிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது’’ என எம்.பி.க்கள் கூறியுள்ளனர்.

மேலும் அந்த கடிதத்தில் ‘‘துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்களுக்கான விளம்பரங்கள் பொது பாதுகாப்பை பாதிக்கும் வகையில் இலக்கு வைக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த பேஸ்புக் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்’’ எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »