Press "Enter" to skip to content

வேளாண் சட்டங்களுக்கு எதிராக மோடியின் ஆட்சி இருக்கும் வரை போராட தயார் – விவசாயிகள் அமைப்பு தலைவர் உறுதி

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 100 நாட்களை கடந்து விட்டது.

முசாபர்நகர்:

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 100 நாட்களை கடந்து விட்டது. 3 சட்டங்களையும் திரும்பப்பெறுவது வரை போராட்டத்தை தொடரப்போவதாக அறிவித்துள்ள விவசாயிகள் தங்கள் கோரிக்கையில் மிகவும் தீவிரமாக உள்ளனர்.

இதை பாரதிய கிசான் யூனியன் அமைப்பின் முன்னணி தலைவர்களான நரேஷ், ராகேஷ் திகாயத்தின் இளைய சகோதரரான நரேந்திர திகாயத் மேலும் உறுதிப்படுத்தி உள்ளார்.

விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

கடந்த காலங்களில் நடந்த போராட்டங்களை பல்வேறு தந்திரங்களை பயன்படுத்தி ஒன்றுமில்லாது செய்ததுபோல இந்த விவசாயிகளின் போராட்டத்தையும் அழித்து விட முடியும் என அரசு தவறாக நினைக்கிறது. அரசு சில சிறிய போராட்டங்களை மட்டுமே எதிர்கொண்டிருக்கிறது. அவற்றை தனது தந்திரங்கள் மூலம் அழித்தும் இருக்கிறது.

ஆனால் கடந்த 35 ஆண்டுகளாக நாங்கள் போராட்டத்தை ஒரு பகுதியாகவே கொண்டுள்ளோம். இந்த போராட்டத்தை எந்தவகையிலும் அவர்களால் நசுக்க முடியாது.

3 சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை நிறைவேறும்வரை இந்த போராட்டம் தொடரும். இந்த அரசுக்கு (பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு) இன்னும் 3½ ஆண்டுகள் மீதமிருக்கிறது. அதுவரை எங்களால் போராட்டத்தை தொடர முடியும். அதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.

எங்கள் கோரிக்கை நிறைவேறாமலோ அல்லது எதிர்காலத்தில் பார்க்கலாம் என்ற உறுதியின்பேரிலோ, பாதியளவு ஏற்கப்பட்டு ஒப்பந்தம் போட்டாலோ போராட்டக்களத்தை நாங்கள் காலி செய்யமாட்டோம்.

பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு எந்தவித ஆபத்தும் இல்லை எனவும், குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையில்தான் கொள்முதல் செய்யப்படும் என அரசு கூறுகிறது. அப்படியென்றால் அதை எழுத்துப்பூர்வமாக அளிப்பதற்கு ஏன் முடியாது? கியாஸ் சிலிண்டர்களுக்கு மானியம் கொடுப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். அனால் அதுவும் போய்விட்டது.

இவ்வாறு நரேந்திர திகாயத் தெரிவித்தார்.

விவசாயத்தை கவனிப்பதற்காக உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் உள்ள சிசாலி கிராமத்தில் வீட்டிலேயே தங்கியிருக்கும் நரேந்திர திகாயத், விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் தனது கவனம் எல்லாம் போராட்டக்களத்திலேயே இருப்பதாகவும், அடிக்கடி காஜிப்பூர் சென்று போராட்டத்தில் பங்கேற்று வருவதாகவும் தெரிவித்தார்.

பாரதிய கிசான் யூனியனை நிறுவிய பெருந்தலைவரான மகேந்திர சிங் திகாயத், இவரது தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. தனது சகோதரர்கள் மேற்படி சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தாலும், நரேந்திர திகாயத் எந்தவித பொறுப்பிலும் இல்லாதது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »