Press "Enter" to skip to content

தி.மு.க. வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிப்பு

தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிட உள்ளதால் தேர்தல் அறிக்கை நாளை வெளியாகும் என தெரிகிறது.

சென்னை:

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் தி.மு.க. மெகா கூட்டணி அமைத்துள்ளது. இதில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் பேரவை ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவது என்பது குறித்து அண்ணா அறிவாலயத்தில் நேற்று 2-வது முறையாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. காங்கிரஸ் தரப்பில் 50 தொகுதிகள் பட்டியலை கொடுத்து அதில் 25 தொகுதிகளை ஒதுக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதில் 5 தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. தாம்பரம், தென்காசி, ஆலங்குளம், வேளச்சேரி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 5 தொகுதிகளை காங்கிரசார் வற்புறுத்தி கேட்டனர்.

ஆனால் இதில் தென்காசி, ஆலங்குளம் தொகுதிகளை ஒதுக்குவதற்கு பதில் வேறு தொகுதிகளை கேட்டு பெறுமாறு தி.மு.க. வலியுறுத்தியது. ஆனால் தென்காசி தொகுதியை கண்டிப்பாக ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தினார்கள்.

தென்காசியில் கடந்த முறை காங்கிரஸ் 500 வாக்கு வித்தியாசத்தில் தோற்றதால், இந்தமுறை தென்காசி தொகுதியை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள். இதனால் நேற்று இரவு வரை தி.மு.க.- காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நீடித்தது.

இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதன் காரணமாக, இன்று (வியாழக்கிழமை) காலை மூன்றாவது தடவையாக மீண்டும் பேச்சுவார்த்தை தொடர்ந்தது.

இதேபோல் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளுக்கும் தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்ததால், அவர்களும் நேற்று வரை தொகுதிகளை ஒதுக்குவது குறித்து தி.மு.க.வுடன் பேசினார்கள். இதில் இன்று காலை ஒருமித்த முடிவு எட்டப்பட்டது.

மேலும் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு மதுராந்தகம் (தனி), சாத்தூர், பல்லடம், மதுரை (தெற்கு), வாசுதேவநல்லூர் (தனி), அரியலூர் உள்ளிட்ட 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இந்த 6 தொகுதியிலும் தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க. போட்டியிடுகிறது. இதேபோல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு கடையநல்லூர், சிதம்பரம், வாணியம்பாடி ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உடன்பாடு காணப்பட்டது.

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு உசிலம்பட்டி தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் உசிலம்பட்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கதிரவன் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

இதுதவிர தி.மு.க. கூட்டணியில் ஆதித்தமிழர் பேரவை கட்சிக்கு அவினாசி (தனி) தொகுதியும், மக்கள் விடுதலைகட்சிக்கு நிலக்கோட்டை (தனி) தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 2 கட்சிகளும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்படும் 2 தொகுதிகள், தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒதுக்கப்படும் 1 தொகுதி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கப்படும் 3 தொகுதிகள் குறித்து இன்று அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடந்தது.

இதுகுறித்து தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவது நிறைவுபெற்றுவிட்டது. இன்று எந்தெந்த தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் என்ற விவரம் அறிவிக்கப்பட்டுவிடும்.

தி.மு.க. 187 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. இதில் தி.மு.க. வேட்பாளர்கள் மட்டும் 173 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தலைவர் மு.க.ஸ்டாலின் தயார் செய்துவிட்டார். கட்சியில் அனுபவம் வாய்ந்தவர்களுக்கும், இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில் பட்டியல் தயாராகி உள்ளது. தி.மு.க. வேட்பாளர் பட்டியலை இன்று மாலை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க. தேர்தல் அறிக்கை இன்று வெளியாவதாக இருந்தது. ஆனால் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிட உள்ளதால் தேர்தல் அறிக்கை நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என தெரிகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »