Press "Enter" to skip to content

புதுவை பா.ம.க.வில் பிளவு- என்.ஆர். காங்கிரசுக்கு ஆதரவு

புதுவையில் பாமக கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் கோபி என்கிற கோபாலகிருஷ்ணன் தலைமையில் பாட்டாளி மக்கள் பேரவை என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது.

புதுச்சேரி:

புதுவையில் பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க.வுக்கு தொகுதி ஒதுக்காததால் தனித்து போட்டியிட போவதாக பா.ம.க. மாநில அமைப்பாளர் தன்ராஜ் அறிவித்தார்.

இதைதொடர்ந்து 10 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஆனால், இடையில் பா.ஜ.க.வுடன் உடன்பாடு ஏற்பட்டு அனைவரின் வேட்பு மனுக்களையும் திரும்பப்பெறுவதாக தன்ராஜ் கூறினார்.

இந்த நிலையில் புதுவையில் பா.ம.க. கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் கோபி என்கிற கோபாலகிருஷ்ணன் தலைமையில் பாட்டாளி மக்கள் பேரவை என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது.

பா.ம.க.வில் இருந்து கோபி தலைமையில் நிர்வாகிகள் விலகி இந்த அமைப்பை உருவாக்கி உள்ளனர்.

இதுபற்றி அவர்கள் கூறுகையில், பா.ம.க. மாநில அமைப்பாளர் தன்ராஜின் செயல்பாடு சரியாக இல்லை. வாட்ஸ்அப் மூலமே கட்சியை நடத்துகிறார்.

30 ஆண்டுகளாக பா.ம.க.வில் பணியாற்றி வருவோரை வயது முதிர்ந்து விட்டது என்று கூறி மதிப்பதில்லை. அதனால் கலந்து ஆலோசித்து புதிய அமைப்பை உருவாக்கி உள்ளோம்.

சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்போம். விரைவில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை சந்தித்து ஆதரவு கடிதம் அளிப்போம். என்.ஆர்.காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வோம் என்று குறிப்பிட்டனர்.

பா.ம.க.வில் இருந்து விலகி புதிய அமைப்பை உருவாக்கியவர்கள் பா.ஜ.க. கூட்டணியிலுள்ள என்.ஆர்.காங்கிரசை ஆதரிப்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »