Press "Enter" to skip to content

கேரளாவில் தேர்தல் முடிவு வெளியாகும் முன்பே 3 தொகுதிகளை இழந்த பாஜக

கேரள சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா 115 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதன் கூட்டணி கட்சிகளுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

திருவனந்தபுரம்:

கேரள சட்டசபைக்கு ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

கேரள சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, காங்கிரஸ் கூட்டணிகளுக்கு மாற்றாக பாரதிய ஜனதா கட்சி 3-வது அணியாக களம் இறங்கி உள்ளது. இத்தேர்தலில் பாரதிய ஜனதா 115 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

கூட்டணி கட்சிகளுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. பாரதிய ஜனதா மாநில தலைவர் சுரேந்திரன், நடிகர் சுரேஷ்கோபி, மெட்ரோ மேன் ஸ்ரீதரன் உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள்.

கடந்த தேர்தலில் பாரதிய ஜனதா நேமம் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் இரட்டை இலக்க வெற்றியை பெற தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் பாரதிய ஜனதா கூட்டணியில் பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சியான அ.தி.மு.க. வேட்பாளர்கள் 3 பேரின் மனுக்கள், வேட்பு மனு பரிசீலனையின் போது தள்ளுபடி செய்யப்பட்டது.

தலசேரி வேட்பாளர் ஹரிதாஸ், வேட்பு மனுவில் அனைத்து விபரங்களையும் சரியாக குறிப்பிடாததால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இது போல திருச்சூர் மாவட்டம் குருவாயூர் தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளராக களம் இறங்கிய நிவேதிதாவின் வேட்பு மனுவில் மாநில தலைவரின் பெயர் சரியாக குறிப்பிடபடாததால் அவரது மனுவும் தள்ளுபடி ஆனது.

அடுத்து தேவிகுளம் தொகுதியில் பாரதிய ஜனதாவின் கூட்டணி கட்சியான அ.தி.மு.க. சார்பில் தனலெட்சுமி போட்டியிட்டார். இவரது மனுவிலும் விபரங்கள் சரியாக குறிப்பிடபடாததால் இவரது மனுவும் தள்ளுபடி ஆனது.

தலசேரி மற்றும் குருவாயூர் தொகுதிகளில் பாரதிய ஜனதா மாற்று வேட்பாளர்களின் மனுக்களும் தள்ளுபடி ஆனதால் இங்கு பாரதிய ஜனதா போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.

இதனை எதிர்த்து பாரதிய ஜனதா கோர்ட்டில் மனு செய்தும், தீர்வு கிடைக்கவில்லை. இதனால் தலசேரி, குருவாயூர், தேவிகுளம் தொகுதிகளில் தேர்தல் முடிவு வெளியாகும் முன்பே இந்த 3 தொகுதிகளையும் பாரதிய ஜனதா இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது பாரதிய ஜனதா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »