Press "Enter" to skip to content

ஏரி, குளங்கள் தூர் வாரினார்களோ, இல்லையோ தமிழக அரசின் கஜானாவை தூர்வாரி சென்று விட்டார்கள்- தினகரன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்குக்கு 10 ஆயிரம் கொடுத்தார்கள். ஆனால், வாக்காளர்கள் என்னைத்தான் வெற்றி பெற வைத்தார்கள். எனவே, மக்கள் தங்கள் வரிப்பணத்தை வாங்கிக் கொண்டு, வாக்கினை மாற்றிப் போடுவார்கள்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் நசியனூர், ஈரோடு, பவானி, அந்தியூர் ஆகிய இடங்களில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அ.ம.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

நசியனூரில் நடந்த பிரசார கூட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் டி.டி.வி.தினகரன் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்தின் கஜானாவை காலி செய்து, 6 லட்சம் கோடி கடனில் தள்ளாட வைத்துள்ளனர். அ.தி.மு.க.வினர் பண மூட்டையை நம்பி தேர்தலில் நிற்கின்றனர். ஆடு,மாடுகளை விலைக்கு வாங்குவதுபோல், வாக்குகளை வாங்க அமைச்சர்கள் ரூ.300 கோடி வரை செலவு செய்கிறார்கள். மற்ற தொகுதிகளில் ரூ.50 கோடிக்கு குறைவில்லாமல் செலவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

மக்களின் வரிப்பணம் உங்களிடம் வருவதால் வாங்கிக் கொள்ளுங்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்குக்கு 10 ஆயிரம் கொடுத்தார்கள். ஆனால், வாக்காளர்கள் என்னைத்தான் வெற்றி பெற வைத்தார்கள். எனவே, மக்கள் தங்கள் வரிப்பணத்தை வாங்கிக் கொண்டு, வாக்கினை மாற்றிப் போடுவார்கள். மக்கள் சரியான முடிவெடுப்பார்கள்.

தமிழன துரோக கூட்டணியை ஓட, ஓட விரட்டுவார்கள். கடந்த 10 ஆண்டுகளாக இலவு காத்த கிளியாய் தி.மு.க.வினர் உள்ளனர். அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்து விடாதீர்கள். ஏற்கனவே இந்த ஆட்சியாளர்கள் கஜானாவை காலி செய்து வைத்து இருப்பதால், தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தால், பொதுமக்களின் சொத்துக்களை சூறையாடி விடுவார்கள். தீய சக்தியையும், துரோக சக்தியையும் ஆட்சிக்கு வர விடாமல் செய்ய வேண்டும்.

அ.ம.மு.க ஆட்சிக்கு வந்தால் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற விவசாயிகளுக்கு எதிரான திட்டங்கள் தடுக்கப்படும். காவிரி பாயும் பகுதியின் இரு கரைகளும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படும். அங்கு தொழிற்சாலைகள் அமைக்க அனுமதிக்கப்படாது. நெசவாளர்கள், அரசு ஊழியர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் பொதுசுத்திகரிப்பு ஆலையம் அமைக்கப்படும். வருங்கால சந்ததியைப் பாதிக்கும் கழிவுநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். நெசவாளர்களுக்கான நூல்விலையை அரசு நிர்ணயிக்கும். தமிழகத்தில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அந்தியூரில் டி.டி.வி.தினகரன் பேசியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் ஜவுளி உற்பத்தி அதிகம் இருக்கக்கூடிய பகுதியாக இருப்பதனால் இந்த பகுதியில் இருப்பவரையே சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பு கொடுக்கப்பட்டது. இருப்பினும் அத்துறையில் இந்த பகுதிக்கு வளர்ச்சிகள் எதுவும் செய்யப்படவில்லை. மேலும் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் அந்தியூர் பகுதிக்கு முக்கிய தேவைகள் எதையும் செய்து கொடுக்கப்பட வில்லை.

மேலும் கடந்த ஆட்சியில் ஏரி, குளங்கள் தூர் வாரினார்களோ இல்லையோ தமிழக அரசின் கஜானாவை தூர்வாரி சென்று விட்டார்கள். இது மிகுந்த வேதனை அளிக்கிறது. வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் எங்களை வெற்றிபெற செய்தால் அந்தியூர் பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான தோனிமடுவு திட்டத்தை நிறைவேற்றி தரப்படும். அந்தியூர் பகுதிக்கு மின்சார மயானம் கொண்டுவரப்படும். இரவு 10 மணிக்கு மேல் அந்தியூரில் இருந்து பிற மாவட்டங்களுக்கு பஸ் வசதி செய்து கொடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து டி.டி.வி. தினகரன் கோபிசெட்டிபாளையம் பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு இரவு 10 மணிக்கு மேல் ஆகிவிட்டதால் பிரசாரம் செய்யாமல் தொண்டர்களை பார்த்து கையசைத்து விட்டு புறப்பட்டு சென்றார்.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »