Press "Enter" to skip to content

அமெரிக்காவில் கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்திய 2 மர்ம நபர்கள் சுட்டுக்கொலை

விர்ஜினியா மாகாணத்தில் உள்ள கடற்கரை ஒன்றில் நேற்று முன்தினம் இரவு அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாஷிங்டன்:

அமெரிக்காவில் அண்மை காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள கடற்கரை ஒன்றில் நேற்று முன்தினம் இரவு அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் நேரப்படி இரவு 11 மணியளவில் கடற்கரையின் முன்பு உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்களை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதனால் அங்கு பெரும் பதற்றமும் பீதியும் உருவானது. மக்கள் அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை சுட்டு வீழ்த்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அடுத்த சில நிமிடங்களுக்குள் இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் மர்ம நபர் ஒருவர் பொதுமக்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்.

இதையடுத்து அங்கு உடனடியாக விரைந்து சென்ற காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்திய அந்த மர்ம நபரையும் சுட்டுக்கொன்றனர்.

முன்னதாக இந்த 2 மர்ம நபர்களும் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள் யார்? தாக்குதலின் பின்னணி என்ன? என்பது குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »