Press "Enter" to skip to content

சென்னை- தர்மபுரியில் சோதனை: அமைச்சர் எம்.சி.சம்பத்தின் உறவினர் நிறுவனத்தில் ரூ.6 கோடி சிக்கியது

வருகிற சட்டமன்ற தேர்தலையொட்டி கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய வருமானவரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சென்னை:

வருகிற சட்டமன்ற தேர்தலையொட்டி கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய வருமானவரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நேரத்தில் நடைபெற்ற இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் உறவினரான டி.என்.சி. இளங்கோவனுக்கு சொந்தமான நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இவருக்கு சொந்தமான டி.என்.சி. என்ற பெயரில் நிதி நிறுவனங்கள் மற்றும் பள்ளிக்கூடம், திரையரங்கம் உள்ளிட்டவையும் உள்ளன. சென்னை தி.நகர் போக்ரோட்டிலும், டி.என்.சி. நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இங்கு வருமானவரித்துறையினர் நேற்று இரவில் இருந்து தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.

தர்மபுரி, பென்னாகரம் சாலையில் உள்ள ஸ்ரீவிஜய்வித்யாலயா ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று இரவு 6 வாகனங்களில் சென்ற அதிகாரிகள், விடிய விடிய சோதனை நடத்தினார்கள். தர்மபுரி பஸ் நிலையம் அருகில் உள்ள டி.என்.சி. தங்கும்விடுதி மற்றும் நிதி நிறுவனத்திலும் சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையில் ரூ.6 கோடி ரொக்கப் பணத்தை வருமானவரித்துறையினர் கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை மற்றும் தர்மபுரியில் நடைபெற்ற சோதனைகளில் இந்த பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த பணத்துக்கு வருமானவரித்துறையினர் உரிய கணக்கு கேட்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று மாலை தொடங்கிய சோதனை இன்று 2-வது நாளாக நீடித்து வருகிறது.

டி.என்.சி. இளங்கோவன் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு ஆகியவற்றின் பொறுப்பாளராகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »