Press "Enter" to skip to content

இந்திய விவசாயத்தின் இன்றைய தேவை, நவீனமயமாக்கல்தான் – பிரதமர் மோடி பேச்சு

கடந்த ஆண்டு இதே மார்ச் மாதத்தில்தான் ஜனதா ஊரடங்கு என்ற வார்த்தையை நாடு முதன் முதலாக கேட்டது. இந்த வார்த்தை ஒட்டுமொத்த உலகையும் கலக்கி விட்டது.

புதுடெல்லி:

நரேந்திர மோடி முதன் முதலாக பிரதமர் பதவி ஏற்ற 2014-ம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்றும், அகில இந்திய வானொலியில் ‘மன்கிபாத்’ என்னும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் மனதில் தோன்றுவதை பேசி வருகிறார்.

அந்த வகையில் நேற்று 75-வது மனதின் குரல் நிகழ்ச்சியின்போது அவர் கூறியதாவது:-

கடந்த ஆண்டு இதே மார்ச் மாதத்தில்தான் ஜனதா ஊரடங்கு என்ற வார்த்தையை நாடு முதன் முதலாக கேட்டது. இந்த வார்த்தை ஒட்டுமொத்த உலகையும் கலக்கி விட்டது. இது இதுவரை நாடு கண்டிராத ஒழுக்கம் ஆகும்.

இதையெண்ணி இனி வரும் தலைமுறைகள் நிச்சயம் பெருமை கொள்வார்கள்.

இதேபோன்றுதான் கொரோனா வீரர்களை கவுரவிக்கவும், மரியாதை செலுத்தவும் தட்டுகளை தட்டி ஒலி எழுப்பியதும், விளக்குகளை ஏற்றியதும்.

இதெல்லாம் கொரோனா வீரர்களின் இதயங்களை எந்தளவுக்கு தொட்டது என்பதை நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அதனால்தான் அவர்கள் ஆண்டு முழுவதும் தளர்ச்சி அடையாமல், ஓய்வு ஒழிச்சலின்றி உறுதியுடன் உழைத்தார்கள்.

தற்போது கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பூசி வந்து விட்டது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை இந்தியா நிறைவேற்றி வருகிறது.

தடுப்பூசி திட்ட புகைப்படங்களுடன் புவனேசுவரத்தை சேர்ந்த புஷ்பா சுக்லா எனக்கு கடிதம் எழுதி இருக்கிறார். கொரோனா தடுப்பூசியில் வீடுகளில் உள்ள பெரியவர்கள் காட்டுகிற ஊக்கத்தை நான் மனதின் குரல் நிகழ்ச்சியின்போது குறிப்பிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இது சரியான ஒன்றுதான். இதுபோன்ற செய்திகளை நாட்டின் எல்லா மூலைகளில் இருந்தும் நாங்கள் கேட்கிறோம். இதயங்களை தொடுகிற படங்களை நாங்கள் பார்க்கிறோம். உத்தரபிரதேச மாநிலத்தில் 109 வயதான மூத்த தாய் ராம் துலையா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். இதே போன்ற டெல்லியில் 107 வயதான கேவல் கிருஷ்ணா தடுப்பூசி போட்டுள்ளார். ஐதராபாத்தில் 100 வயதான ஜெய் சவுத்திரி தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளார். டுவிட்டர், பேஸ்புக் எல்லாவற்றிலும் தற்போது வீடுகளில் உள்ள பெரியவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் படங்களை பதிவேற்றம் செய்வதை காண்கிறேன். கேரளாவை சேர்ந்த இளைஞர் ஆனந்தன் நாயர், உள்ளபடியே தடுப்பூசி சேவை என்ற புதிய வார்த்தையையே கொடுத்துள்ளார். உங்கள் அனைவரின் எண்ணங்களையும் நான் பாராட்டுகிறேன்.

இன்றைய வாழ்க்கையில் எல்லாத்துறையிலும் நவீனமயம் அத்தியாவசிய தேவையாகி உள்ளது.

குறிப்பாக இந்திய விவசாயத்தில் நவீனமயமாக்கல் என்பது இந்த கணத்தின் தேவையாக இருக்கிறது. இது ஏற்கனவே தாமதமாகி விட்டது. நாம் நிறைய நேரத்தை இழந்து விட்டோம்.

விவசாய துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதற்கும் பாரம்பரிய விவசாயம் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு புதிய மாற்றங்களை ஏற்றுக்கொள்வதும், புதிய வாய்ப்புகளை உருவாக்குவதும், முக்கியம் ஆகும். வெண்மைப்புரட்சியின்போது நாட்டுக்கு இந்த அனுபவம் வாய்த்து இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »