Press "Enter" to skip to content

தமிழகத்தில் அத்தியாவசியமற்ற பணிகளுக்கு படிப்படியாக கட்டுப்பாடு விதிக்கப்படும்- சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மட்டுமே ஒரு நாளில் 2 சதவீதத்துக்கு மேல் பொதுமக்கள் புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை:

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா தடுப்பு பணிகள் குறித்து  சுகாதாரத்துறை செயலாளர் மருத்துவர்
ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவக் கல்வி இயக்குனர் மருத்துவர் நாராயணபாபு, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ‘டீன்’ மருத்துவர்
தேரணிராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. சென்னை, கோவை, செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. மத்திய
அரசு, கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாக வெளியிட்ட 46 மாவட்டங்களில் தமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மட்டுமே ஒரு நாளில் 2 சதவீதத்துக்கு மேல் பொதுமக்கள் புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். சென்னையில் உள்ள
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் கொரோனா நோய் கட்டுப்பாடு பகுதிகளில்
கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும்
கொரோனா தடுப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்தியா முழுவதும் குடிசைப் பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறைவாகவே பதிவாகி உள்ளது. அதேநேரம், கூட்டுக் குடியிருப்பு பகுதியில் கொரோனா பாதிப்பு
அதிகமாக உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் தமிழகத்தில் 18 வயது முதல் 45 வயது வரை உள்ள 51 சதவீதம் பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி
வருகின்றனர். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 42 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. 18 வயது முதல் 45 வயது வரை இறப்பு விகிதம்
குறைவாக உள்ளது. தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய அவசியம் தற்போது இல்லை. கடந்த ஆண்டு கொரோனா நோய்க்கு எந்த மருந்தும்
இல்லாமல் இருந்ததாலும், மருத்துவ வசதிகளை அதிகப்படுத்த மட்டுமே ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.

தற்போதுள்ள சூழலில் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகரித்தால் படிப்படியாக அத்தியாவசியமற்ற
பணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »