Press "Enter" to skip to content

தபால் வாக்குகளை பையில் சேகரித்த தேர்தல் அதிகாரிகள்- பெட்டி கொண்டு வரும்படி அடம்பிடித்த மூதாட்டி

மூடி முத்திரையிட்ட பெட்டி கொண்டு வாருங்கள். அதில் தான் தபால் வாக்கு சீட்டை போடுவேன் என்று 92 வயது மூதாட்டி பவானி அம்மா அடம்பிடித்தார்.

திருவனந்தபுரம்:

கேரளாவில் வருகிற 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.

கொரோனா பிரச்சினை காரணமாக இம்முறை வாக்குசாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்களிக்கும் நேரமும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதுதவிர முதியவர்கள் வாக்குசாவடிக்கு செல்லாமல் முன்கூட்டியே தபால் வாக்குகள் அளிக்கவும் தேர்தல் கமி‌ஷன் ஏற்பாடு செய்துள்ளது. தபால் வாக்குபதிவு தற்போது தொடங்கி நடந்து வருகிறது.

தேர்தல் அதிகாரிகள் முதியவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு நேரில் சென்று அவற்றை சேகரித்து வருகிறார்கள். அவை கட்டை பைகளில் சேகரிக்கப்பட்டு வருகிறது.

கோட்டயம் மாவட்டம் கொல்லம்பரம்பில் பகுதியை சேர்ந்த 92 வயது மூதாட்டி பவானி அம்மா என்பவர் தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்து இருந்தார்.

தேர்தல் அதிகாரிகள் தபால் வாக்கு சீட்டை பெற்றுக்கொள்ள பவானி அம்மா வீட்டிற்கு சென்றனர். அவரிடம் கட்டை பையை நீட்டி அதில் தபால் வாக்கை போடும்படி அதிகாரிகள் கூறினர். பையை பார்த்ததும் பவானி அம்மா தபால் வாக்கை அதில் போட மறுத்து விட்டார்.

இந்த பையில் வாக்கு சீட்டை போட்டால் அது எப்படி பாதுகாப்பாக இருக்கும்? இந்த வாக்குசீட்டு எண்ணப்படுமா? என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. எனவே நீங்கள் மூடி முத்திரையிட்ட பெட்டி கொண்டு வாருங்கள். அதில் தான் வாக்கு சீட்டை போடுவேன் என்று அடம் பிடித்தார்.

மூதாட்டி தபால் ஓட்டை போட மறுத்து பிரச்சினை செய்தது பற்றிய தகவல் மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான அஞ்சனா கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் உடனே மூதாட்டி பவானி அம்மாவிடம் செல்போனில் பேசி சமரசம் செய்தார்.

மாவட்ட ஆட்சியரின் சமரசத்தை ஏற்றுக்கொண்ட பவானி அம்மா அரைகுறை மனதுடன் தபால் வாக்கை பையில் போட்டார்.

இதற்கிடையே பவானி அம்மாவின் மகன் சலீம் குமார் இதுபற்றி தேர்தல் கமி‌ஷனில் புகார் செய்தார். அதில் தனது தயார் தபால் வாக்குபதிவு செய்தபோது தேர்தல் அதிகாரிகள் அருகில் இருந்தனர்.

இது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது. இது பற்றி தேர்தல் கமி‌ஷன் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »