Press "Enter" to skip to content

கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழகத்திற்கு மின்சாரத்தின் தேவை அதிகரிப்பு

தமிழகத்தில் தற்போது வெப்பத்தின் தாக்கம் கொஞ்சம் அதிகரித்திருப்பதுடன், சட்டசபை தேர்தலுக்கான பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுவதாலும் மின்சாரத்தின் தேவை அதிகரித்து உள்ளது.

சென்னை:

தமிழகத்தில் மின்சாரத்தின் தேவை உச்சபட்சமாக 14 ஆயிரம் மெகாவாட்டாக இருந்து வந்தது. கோடைகாலம் என்றால் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிகளவு மின்சாதனங்கள் பயன்படுத்தப்படுவதால் 15 ஆயிரம் மெகாவாட்டை எட்டுவது வழக்கம். அதேபோல் மழைக்காலங்களில் மின்சாதனங்களின் பயன்பாடு குறைவாக இருக்கும் என்பதால் 12 ஆயிரம் மெகாவாட்டுக்கும் கீழே சரிவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலை தடுப்பதற்காக கடந்த ஆண்டு கோடைகாலத்தில் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் செயல்படாததால் மின்சாரத்தின் தேவை மிக குறைவாகவே இருந்து வந்தது. குறிப்பாக வீடுகளில் மட்டும் மின்சாரம் பயன்படுத்தப்பட்டதால் 10 ஆயிரம் மெகாவாட்டுக்கும் கீழே தேவை வந்தது. ஆனால் கடந்த சில தினங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்திருப்பதால் மின்சாரத்தின் தேவையும் அதிகரித்து உள்ளது.

இதுகுறித்து எரிசக்தி துறை அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழகத்தில் கோடை காலத்தில் தான் மின்சாரத்தின் தேவை அதிகரிப்பது வழக்கம். ஆனால் நடப்பாண்டு கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே மின்சாரத்தின் தேவை அதிகரித்து உள்ளது. குறிப்பாக கடந்த 26-ந்தேதி காலை 11 மணி அளவில் 16 ஆயிரத்து 481 மெகாவாட்டாக உயர்ந்தது. இதுவே தமிழக மின்சார வாரியத்தின் உச்சபட்ச தேவையாகும். இதற்காக அனல் மின்நிலையங்களில் உற்பத்தி திறனை சற்று அதிகரித்து திறம்பட வினியோகம் செய்யப்பட்டது. இதற்கு முன்பு கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 3-ந்தேதி இரவு 7.05 மணி அளவில் 16 ஆயிரத்து 151 மெகாவாட் அதிகரித்தது தான் அதிகபட்சமாக இருந்தது.

தற்போதைய மின்சாரத்தின் தேவை அதிகரிப்புக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு ஒரு காரணமும், சட்டசபை தேர்தலுக்கான பொதுக்கூட்டங்கள் நடத்துவது, பொதுமக்கள் தகவல் தொடர்பு சாதனங்களை அதிகளவு பயன்படுத்துவது போன்ற காரணங்களால் அதிகரித்து உள்ளது. கடந்த 26-ந்தேதிக்கு பிறகு சனி, ஞாயிற்று கிழமைகள் வந்ததால் தேவை 15 ஆயிரம் மெகாவாட்டாக குறைந்தது. தொடர்ந்து இன்று (நேற்று) மின்சாரத்தின் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காலநிலையில் சற்று மாற்றம் போன்ற காரணங்களால் தேவை அதிகரிக்கப்படவில்லை. ஆனால் வருகிற கோடைகாலத்தில் மின்சாரத்தின் தேவை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேவை அதிகரித்தாலும் அதனை சமாளிப்பதற்காக உற்பத்தியை அதிகரிப்பதற்காக எந்த நேரமும் தயார் நிலையில் இருக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »