Press "Enter" to skip to content

பாலின இடைவெளி பட்டியல் : உலக அளவில் 140-வது இடத்தில் இந்தியா

உலக பொருளாதார அமைப்பின் உலகளாவிய பாலின இடைவெளி பட்டியலில் கடந்த ஆண்டைவிட இந்தியா 28 இடங்கள் சரிந்துள்ளது.

புதுடெல்லி:

பொருளாதார பங்கேற்பு மற்றும் வாய்ப்பு, கல்வி பெறுதல், சுகாதாரம் மற்றும் வாழ்தல், அரசியல் அதிகாரம் ஆகியவற்றில் ஆண்-பெண் பாலின இடைவெளியை உலக பொருளாதார அமைப்பு ஆய்வு செய்து 15 ஆண்டுகளாக அறிக்கை வெளியிட்டு வருகிறது.

அதன்படி, 2021-ம் ஆண்டுக்கான அறிக்கையில் மொத்தம் 156 நாடுகள் பட்டியலில் இந்தியா 140-வது இடத்தையே பெற்றுள்ளது. அதிலும் கடந்த ஆண்டு 112-வது இடத்தில் இருந்த இந்தியா, மேலும் 28 இடங்கள் சரிந்துள்ளது.

குறிப்பாக பொருளாதார பங்கேற்பு மற்றும் வாய்ப்பு துணைப் பட்டியலில் இந்தியாவின் பாலின இடைவெளி 3 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல அரசியல் அதிகாரம் துணைப் பட்டியலிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. தொழில் மற்றும் தொழில்நுட்ப பணிகளிலும் அதேநிலைதான். இந்தியாவில் 14.6 சதவீத பெண்கள்தான் உயர் பதவிகளில் உள்ளனர்.

பெண்களின் வருவாய் விஷயத்திலும் உலகின் கடைசி 10 நாடுகளில் ஒன்றாகவே இந்தியா உள்ளது. இங்கு ஆண்களுடன் ஒப்பிடும்போது 5-ல் ஒரு பங்கு மட்டுமே பெண்கள் வருமானம் ஈட்டுகின்றனர். சுகாதாரம் மற்றும் வாழ்தல் துணைப்பட்டியலிலும் இந்தியா கடைசி 5 நாடுகளில் ஒன்றாகத்தான் உள்ளது. பாலின பிறப்பு விகித வேறுபாடும் அதிகமாக உள்ளது. பொதுவில் இந்தியாவின் பாலின இடைவெளி 62.5 சதவீதமாக இருக்கிறது.

பாலின இடைவெளி பட்டியலில் அண்டை நாடுகளான வங்காளதேசம் (65), நேபாளம் (106), இலங்கை (116), பூட்டான் (130) ஆகியவை இந்தியாவை விட முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தெற்காசியாவில் இந்தியாவை விட பின்தங்கியிருப்பவை பாகிஸ்தான் (153), ஆப்கானிஸ்தான் (156) ஆகிய 2 நாடுகள்தான்.

தொடர்ந்து 12-வது முறையாக உலகின் பாலின சமத்துவமிக்க நாடாக ஐஸ்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. பின்லாந்து, நார்வே, நியூசிலாந்து, ருவாண்டா, சுவீடன், அயர்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும் இரு பாலினத்தவருக்கும் சமவாய்ப்பு அளிப்பதில் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளன.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »