Press "Enter" to skip to content

இன்று முதல் வாக்குப்பதிவு முடியும் வரை கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்னென்ன?

சட்டமன்ற தேர்தலையொட்டி இன்று முதல் வாக்குப்பதிவு முடியும் வரை சென்னையில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்னென்ன என்பது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை:

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 6-ந் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. இந்தநிலையில் இன்று (4-ந் தேதி) இரவு 7 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்னென்ன என்பது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

* தேர்தல் தொடர்பான எந்த ஒரு பொதுக்கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ கூடாது.

* எந்த ஒரு தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எப்.எம். வானொலி, வாட்ஸ்அப், முகநூல், டுவிட்டர் வாயிலாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக்கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உள்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பும் இதில் அடங்கும்.

* பொதுமக்களை ஈர்க்கும்வகையில் இசைநிகழ்ச்சி, திரையரங்கச் செயல்பாடு, கேளிக்கை, பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்தி, தேர்தல் பரப்புரை செய்யக்கூடாது. மீறும்பட்சத்தில் அபராதத்துடன் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

* சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதியின் வெளியேயிருந்து அழைத்துவரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் மற்றும் வாக்காளர்கள் இன்று இரவு 7 மணிக்கு மேல் தொகுதியைவிட்டு வெளியேற வேண்டும்.

* கல்யாண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பதை ஆய்வு செய்து வெளியாட்கள் இல்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும்.

* வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திரப் பேச்சாளர்கள் உள்பட வாகன அனுமதிகள், இன்று (4-ந் தேதி) இரவு 7 மணி முதல் செயல்திறனற்றதாகிவிடும்.

* வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்துவருவதற்கும், வாக்குச்சாவடிகளில் இருந்து அழைத்துச்செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்த ஒரு வேட்பாளரும் அனுமதிக்கக்கூடாது.

* 2 நபர்களை மட்டுமே கொண்ட, வேட்பாளர்களின் அரசியல் கட்சிகளின் தற்காலிக பிரசார அலுவலகம் வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவுக்கு வெளியே அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அனுமதிக்கக்கூடாது. அங்கு எந்தவித உணவுப் பொட்டலங்களும் பரிமாறக்கூடாது. இந்த முகாம்களில் இருப்பவர்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அவர்கள் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »