Press "Enter" to skip to content

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகி ஆதித்யநாத்

தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என உ.பி. முதல்வர் வலியுறுத்தி உள்ளார்.

லக்னோ:

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிராக பரவி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுடன், பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் தடுப்பூசி போடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. 

தடுப்பூசி தொடர்பாக பொதுமக்களிடையே உள்ள அச்ச உணர்வை போக்கும் வகையில் அரசியல் தலைவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர். அத்துடன் மக்கள் தவறாமல் தடுப்பூசி போட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தவண்ணம் உள்ளனர்.

அவ்வகையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். லக்னோவில் உள்ள அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட அவர், பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கிய பிரதமர் மற்றும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார். 

‘நாட்டின் விஞ்ஞானிகளுக்கும் நான் நன்றி கூறுகிறேன். தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது. நமது முறை வரும்போது நாம் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும். புதிய கொரோனா அலை என்பது, கொரோனா தாக்கம் குறைந்துவிட்டது என்று நாம் அடைந்த மனநிறைவின் விளைவாகும்’ என்றும் யோகி ஆதித்யநாத் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »