Press "Enter" to skip to content

ராஜஸ்தானில் இன்று முதல் வரும் 19ம் தேதி வரை இரவு ஊரடங்கு

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் நகரில் இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை இரவு ஊரடங்கை அமல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தானில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, தொற்றை தடுக்கும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

ராஜஸ்தானுக்குள் வேறு மாநிலங்களில் இருந்து நுழைய மற்றும் மாநிலத்தில் இருந்து வெளியே பயணம் செய்பவர்களுக்கு ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்வது கட்டாயம்.

1 முதல் 9 வரையிலான வகுப்புகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன. இரவு ஊரடங்கு உத்தரவுகளை மாவட்ட மாஜிஸ்திரேட் அமல்படுத்தலாம். ஆனால், இரவு 8 மணிக்கு முன்பும் மற்றும் காலை 6 மணிக்கு பின்பும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது பற்றி அரசின் அனுமதியைப் பெறவேண்டும்.

உணவு விடுதியில் இருந்து உணவை வாங்கிச் செல்லலாம். டெலிவரி சேவைக்கும் அனுமதி அளிக்கப்படும். இவை தவிர்த்து உணவு விடுதிகள் இரவு ஊரடங்குக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்.

திருமண நிகழ்ச்சிகளுக்கு 100 பேருக்கு கூடுதலாக அனுமதி கிடையாது. திரையரங்குகள் மற்றும் மல்டி பிளக்ஸ் திரையரங்குகள் ஆகியவை மூடப்பட்டு இருக்கும்.

இந்நிலையில், ராஜஸ்தானில் ஜோத்பூர் நகரில் கொரோனா பாதிப்புகள் தீவிரமடைந்து வருகின்றன. இதனை முன்னிட்டு ஜோத்பூரில் இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை இரவு ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி இன்று இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு நீடிக்கும்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில் மகாராஷ்டிராவின் அவுரங்காபாத், நாக்பூர், புனே உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு ஊரடங்கை அமல்படுத்த முடிவானது.

ஒடிசாவின் 10 நகரங்களில் தொற்றை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி சுந்தர்கார், ஜார்சுகுடா, சம்பல்பூர், பார்கர், பொலாங்கீர், நுவாபடா, காலஹண்டி, நவ்ராங்பூர், கோரபுட் மற்றும் மால்கன்கிரி ஆகிய நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்.

அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள், நிலையங்கள் உள்ளிட்டவை மூடப்படும். மற்றும் தனிநபரின் இயக்கத்திற்கும் தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், வேறு சில மாநிலங்களிலும் இரவு ஊரடங்கை அமல்படுத்த அரசுகள் ஆலோசித்து வருகின்றன.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »