Press "Enter" to skip to content

நக்சலைட்டுகளுக்கு எதிரான போர் மேலும் தீவிரப்படுத்தப்படும் – அமித்ஷா அறிவிப்பு

சத்தீஸ்காரில் நக்சலைட்டுகளுடனான துப்பாக்கி சண்டையில் 24 வீரர்கள் பலியான நிலையில், அங்கு உயர் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

ராய்ப்பூர்:

சத்தீஸ்காரில் நக்சலைட்டுகளுடனான துப்பாக்கி சண்டையில் 24 வீரர்கள் பலியான நிலையில், அங்கு உயர் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். நக்சலைட்டுகளுக்கு எதிரான போர் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

சத்தீஸ்கார் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் கடந்த 3-ந் தேதி பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, நக்சலைட்டுகளுடன் துப்பாக்கி சண்டை மூண்டது. இதில், பாதுகாப்பு படையினர் 24 பேர் பலியானார்கள்.

இதை அறிந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அசாம் தேர்தல் பிரசார பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு அவசரமாக டெல்லி திரும்பினார். சத்தீஸ்கார் மாநில காங்கிரஸ் முதல்-மந்திரி பூபேஷ் பாகலுடன் தொலைபேசியில் பேசி நிலைமையை கேட்டறிந்தார்.

இந்தநிலையில், அமித்ஷா நேற்று சத்தீஸ்காருக்கு நேரில் சென்றார். நக்சலைட்டு ஆதிக்கம் மிகுந்த பஸ்தார் மாவட்டம் ஜகதால்பூருக்கு சென்றடைந்தார். அங்கு துப்பாக்கி சண்டையில் பலியான வீரர்களின் உடல்களுக்கு அமித்ஷா அஞ்சலி செலுத்தினார்.

அந்த உடல்களை அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது, முதல்-மந்திரியும் உடன் இருந்தார்.

பின்னர், ஜகதால்பூரில் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட ஆய்வு கூட்டத்தை அமித்ஷா கூட்டினார். அதில், முதல்-மந்திரி பூபேஷ் பாகல், மத்திய படைகளின் உயர் அதிகாரிகள், மாநில காவல் துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

துப்பாக்கி சண்டை நடந்த பகுதியை ஏற்கனவே ஆய்வு செய்த சி.ஆர்.பி.எப். டி.ஜி.பி. குல்தீப்சிங், சண்டை தொடர்பான விவரங்களை எடுத்துரைத்தார். நக்சலைட் வேட்டையை மேலும் தீவிரமாக முன்னெடுத்து செல்வது குறித்து ஆலோசனை தெரிவித்தார்.

மாநில காவல் துறை டி.ஜி.பி.யும், நக்சலைட் தடுப்பு பணிக்கான சிறப்பு டி.ஜி.பி.யும் ஒரு அறிக்கை சமர்ப்பித்தனர். தலைக்கு ரூ.40 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்ட நக்சலைட்டு தலைவன் ஹிட்மா பதுங்கி இருப்பது குறித்து தகவல் தெரிந்ததால், இந்த தேடுதல் வேட்டையை தொடங்கியதாக அவர்கள் தெரிவித்தனர்.

அதற்கு அமித்ஷா, நக்சலைட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும்வகையில் புதிய வியூகம் வகுக்குமாறு பாதுகாப்பு படை அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

அதற்கு உயர் அதிகாரிகள், நக்சலைட்டு ஒழிப்பு பணி இறுதிநிலையை எட்டும்வரை முழு உறுதியுடன் வேட்டையை தொடர வேண்டும் என்று உறுதியாக தெரிவித்தனர். அதைக்கேட்ட அமித்ஷா, நக்சலைட்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டைக்கு மத்திய அரசு எல்லா உதவிகளும் அளிக்கும் என்று உறுதி அளித்தார்.

கூட்டம் முடிந்த பிறகு, அமித்ஷா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கூட்டத்தில் பங்கேற்ற பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள், நக்சலைட்டுகளுக்கு எதிரான போரின் தீவிரத்தை குறைக்கக்கூடாது என்று வலியுறுத்தினர். இதன்மூலம் அவர்களின் மனஉறுதி அப்படியே இருப்பதை உணரலாம்.

கடந்த சில ஆண்டுகளாக, நக்சலைட்டு எதிர்ப்பு போர், தீவிரமான கட்டத்தை அடைந்துள்ளது. இந்த தாக்குதல், இப்போரை இன்னும் 2 அடி முன்னால் போக வைத்துள்ளது.

வீரர்களின் உயிர்த்தியாகம் வீண்போகாது. அவர்களின் தியாகத்தை நாடு ஒருபோதும் மறக்காது. நக்சலைட்டு் பகுதிகளில் பாதுகாப்பு படையினர் வெற்றிகரமாக முகாம்கள் அமைத்துள்ளனர்.

அங்கு வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, நக்சலைட்டுகள் விரக்தியடைந்து இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

நக்சலைட்டுகளுக்கு எதிரான போர் நிறுத்தப்படாது. நக்சலைட்டு பிரச்சினைக்கு முடிவு கட்ட போர் மேலும் தீவிரப்படுத்தப்படும். அதன் இறுதியில் நமக்கு வெற்றி கிடைக்கப்போவது உறுதி. பிரதமர் மோடியும் இப்போரை இறுதிக்கட்டத்துக்கு எடுத்துச் செல்வதில் ஆர்வமாக இருக்கிறார்.

இவ்வாறு அமித்ஷா கூறினார்

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »