Press "Enter" to skip to content

9, 11-ம் வகுப்பில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி: மந்திரி வர்ஷா கெய்க்வாட் அறிவிப்பு

மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் காரணமாக 9, 11-ம் வகுப்பு மாணவர்கள் பரீட்சை இன்றி தேர்ச்சி பெற்றதாக மந்திரி வர்ஷா கெய்க்வாட் அறிவித்து உள்ளார்.

மும்பை :

நாட்டில் கொரோனா கால் பதித்து ஒரு ஆண்டை கடந்துவிட்டது. இருப்பினும் இந்த நோய் பரவலுக்கு தீர்வு கண்டறியப்படவில்லை.

கொரோனாவின் ஆதிக்கம் நாட்டின் எதிர்கால சிற்பிகளான மாணவர்களின் படிப்பை அதிகமாக பாதித்துள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா தொற்றினால் அமல்படுத்தப்பட்டு இருந்த பொது ஊரடங்கு காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. அதுமட்டும் இன்றி கடந்த ஆண்டு சில வகுப்புகளுக்கு தேர்வு நடத்தாமலேயே அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதன்பின்னர் நோய் பாதிப்பு சற்று குறைந்ததை தொடர்ந்து நவம்பர் மாதம் 23-ந்தேதி 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிக்கூடம் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் வருகிற 23-ந் தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது.

ஆனால் மீண்டும் கொரோனாவின் 2-வது அலை மாணவர்களின் படிப்பை சூறையாடி உள்ளது. தொற்று அதிதீவிரமாக பரவியதை அடுத்து பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டன. மாணவர்களுக்கு கணினிமய மூலம் பாடம் நடத்தப்படுகிறது.

இதற்கிடையே மராட்டிய கல்வி மந்திரி வர்ஷா கெய்க்வாட் இந்த ஆண்டும் 9 மற்றும் 11-ம் வகுப்புக்கான பரீட்சைகள் நடத்தப்படாமல் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

மகாராஷ்டிராவில் தற்போது நோய் தொற்று வேகமாக பரவி வருவதால் 9 மற்றும் 11-ம் வகுப்பு தேர்வுகளை நடத்துவதற்கு கடினமான சூழ்நிலை நிலவுகிறது.

எனவே 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து உள்ளோம். நீண்ட ஆலோசனைக்கு பிறகே மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே 10 மற்றும் 12-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நடத்துவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் தற்போதைய மோசமான சூழ்நிலையில் அந்த தேர்வுகளை நடத்துவது குறித்து ஆய்வு செய்து விரைவில் முடிவை அறிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மந்திரியின் தகவலால் திட்டமிட்டபடி 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

மராட்டியத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை நெருங்கியது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »